கடும் மழை எச்சரிக்கை காரணமாக குகைக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி நிறுத்தம்!

Sunday, July 8th, 2018

தாய்லாந்தில் கடும் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, குகைக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இல்லை, இன்று இல்லை என்று மீட்புப் பணிகள் குறித்த கேள்விக்கு சியாங் ராய் மாகாண ஆளுநர் நரோன்சக் ஒசோட்டனகோம் கூறியுள்ளார்.
குகையில் பிராண வாயுவின் அளவு 15 சதவீதமாகக் குறைந்திருப்பது கவலை அளிப்பதாக இருந்தாலும், சிறுவர்கள் அனைவரும் 11-16 வயதுக்குள் இருப்பதால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், தற்போதும் அவர்கள் அங்கே இங்கே நடந்து ஓடிக் கொண்டிருப்பதாகவும் பிரிட்டன் மருத்துவ நிபுணர் கூறியிருப்பதையும் மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களை மீட்பதற்கு பல்வேறு திட்டங்களை யோசித்து வருகிறோம். சிறந்த திட்டத்தை செயல்படுத்துவோம் என்றார்.
முன்னதாக தாய்லாந்தில் மழை வெள்ளம் காரணமாக குகைக்குள் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவரது கால்பந்து பயிற்சியாளருக்கு அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு சென்ற மீட்புக் குழு வீரர், பிராண வாயு (ஆக்ஸிஜன்) பற்றாக்குறையால் உயிரிழந்தார்.
இதுகுறித்து சியாங் ராய் மாகாணத்தின் துணை நிலை ஆளுநர் பாஸக்கார்ன் பூன்யாலக் கூறியதாவது:
சியாங் ராய் குகைப் பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த சமன் குணான் என்ற முன்னாள் கடல் அதிரப்படை வீரர், வியாழக்கிழமை இரவு 2 மணிக்கு உயிரிழந்தார்.
குகைக்குள் சிக்கியுள்ள 12 சிறுவர்களுக்கும், அவர்களது கால்பந்து பயிற்சியாளருக்கும் ஆக்ஸிஜன் உருளைகளை அளித்துவிட்டு திரும்பும் வழியில், அவரிடமிருந்த உருளையில் ஆக்ஸிஜன் தீர்ந்துவிட்டதால் மயக்கநிலையடைந்து அவர் உயிரிழந்தார்.
அவருடன் சென்றிருந்த மற்றொரு வீரர் எவ்வளவோ முயன்றும், தாம் லுவாங்கின் நினைவு திரும்பவில்லை.
மீட்புப் பணியில் ஒரு வீரரை நாங்கள் இழந்தாலும், குகைக்குள் சிக்கியுள்ள 13 பேரையும் மீட்கும் எங்களது உறுதிப்பாடு குலைந்துவிடவில்லை என்றார் அவர்.
தாய்லாந்தில், 11 முதல் 16 வயது வரை கொண்ட 12 சிறுவர்களை, அவரது 25 வயது கால்பந்து பயிற்சியாளர் சியாங் ராய் என்னும் பகுதிக்கு கடந்த மாதம் 23-ஆம் தேதி சுற்றுலா அழைத்துச் சென்றார்.
அப்போது அந்தப் பகுதியிலுள்ள, பல கி.மீ. நீளம் கொண்ட குகையைப் பார்வையிட, அந்த 13 பேரும் அதற்குள் சென்றுள்ளனர். எனினும், திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்தது.
அதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர்.
இந்தத் தகவல், தாய்லாந்து முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குகைக்குள் மாயமான சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் பிரார்த்தனை செய்யப்பட்டன.
இந்தச் சூழலில், மழை வெள்ளம் கொஞ்சம் வடிந்ததால் சிறுவர்கள் சிக்கிய 7 நாள்களுக்குப் பிறகு தேடுதல் பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, அந்த 13 பேரும் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை எழுந்தது. எனினும், கடுமையான வெள்ளம் மற்றும் சகதியில் அவர்கள் இத்தனை நாள்கள் உயிர் பிழைத்திருப்பது கடினம் என்றும் அஞ்சப்பட்டது.
இந்தச் சூழலில், தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த பிரிட்டன் நீச்சல் வீரர் ஒருவர் குகையின் பாறை மேடு ஒன்றில் அந்த 13 பேரையும் திங்கட்கிழமை இரவு கண்டறிந்தார்.
பசி மற்றும் களைப்பால் மிகவும் சோர்வுற்றும், மெலிந்தும் காணப்பட்ட அவர்கள் அந்த வீரரிடம் பேசிய வீடியோவை தாய்லாந்து கடல் அதிரடிப்படை வெளியிட்டது.
அதன் தொடர்ச்சியாக, அவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
குகைக்குள் சிறுவர்கள் இருக்குமிடம் கண்டறியப்பட்டாலும், குகைக்குள் ஓடும் வெள்ள நீர் மற்றும் சகதியில் நீந்தி வர அவர்களுக்கு சிறப்பு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் அல்லது குகையில் வெள்ள நீர் வடியும் வரை காத்திருந்து அவர்களை வெளியே அழைத்து வரலாம் என்று மீட்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர். எனினும், அதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
அந்த 13 பேரும் குறுகலான குகைப் பாதையில் தேங்கியிருக்கும் நீர் மற்றும் சகதியில் நீந்தி வருவதற்கு உடலளவிலும், மனதளவிலும் 100 சதவீதம் தயாரான பிறகே, ஒவ்வொருவராக குகையிலிருந்து மீட்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts: