ஓடும் புகையிரதத்தில் கொள்ளை: ஊழியர்கள் கூட்டு சதியா?

Thursday, August 11th, 2016

தமிழகத்தில் ஓடும் ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ரயில்வே ஊழியர்கள் துணையுடன் வடமாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

ரயில் கொள்ளை தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் ராஜ்மோகன், எஸ்.பி ஆனிவிஜயா ஆகியோர் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதுகுறித்து ஆனி விஜயா கூறுகையில், ஓடும் ரயிலில் ஏறி மேற்கூரையில் துளையிடுவது என்பது சாதாரண விடயமல்ல, ரயில்வே துறையில், தொழில்நுட்ப பிரிவு ஊழியர்களால் மட்டுமே முடியும்.

இந்த துறையினரின் உதவி இல்லாமல், மர்ம நபர்கள் பணத்தை கொள்ளை அடித்திருக்க சாத்தியமில்லை. ரயில் பெட்டி ஈரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தபோது, மேற்கூரை இரும்பு தகட்டில் சிறிய இடைவெளி விட்டு புள்ளி, புள்ளியாக ஓட்டை போட்டுள்ளனர். பின் ஓட்டைகளுக்கு இடைபட்ட பகுதியை சதுர வடிவில் அறுத்துவிட்டு வெளிச்சம் ரயில் பெட்டிக்குள் விழாதவாறு செல்லோ டேப் போட்டு ஒட்டி மறைத்துள்ளனர்.

பின் அந்த ரயிலில் பயணித்த கொள்ளையர்கள் ரயிலின் மேற்பகுதிக்கு சென்று, துளை வழியாக இறங்கி பணத்தை வெளியே எடுத்து சென்றுள்ளனர், ஆத்துார்- விருத்தாச்சலம் இடையே கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக மொபைல் போன் பதிவுகள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த மொபைல் எண்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களுடையது என்பதையும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் ராஜ்மோகன் கூறுகையில், கோடிக்கணக்கில் பணம் கொண்டு செல்லப்பட்டபோதிலும், வங்கி அதிகாரிகள் எங்களிடம் பாதுகாப்பு கேட்கவில்லை; அதுவும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ரயில் மூன்று இடங்களில் மெதுவாக நின்று சென்றுள்ளது, இந்த கோணத்திலும் விசாரித்து வருகிறோம் என்றார்.

தமிழகத்தில் ரயில் கொள்ளை தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணையில் சிறப்பு விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி சிவனுபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். சேலத்தில் இருந்து சென்னை சென்ற ரயிலில் கொண்டு செல்லப்பட்ட வங்கி பணம் ரூ.5.75 கோடி நேற்று முன்தினம் கொள்ளையடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிசார் விசாரணை நடத்தி வந்த போதும், எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. எனவே வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது, இதனை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக டிஎஸ்பி சிவனுபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே ரயில் கடந்த சென்ற தடங்களில் இருக்கும் சிசிடிவி கமெராக்களை ஆய்வு செய்து வருவதாகவும், இதுவரை கிடைத்த தடயவியல் ஆதாரங்களை கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி பகத் தெரிவித்துள்ளார்.

Related posts: