ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் கோக், பெப்சி உள்ளிட்டவற்றுக்குத் தடை!

Friday, May 17th, 2019

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி முதல் அந்நியக் குளிர்பானங்களான கோக், பெப்சி உள்ளிட்டவற்றுக்குத் தடை விதிக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு எதிராகச் செயல்பட்ட பீட்டா அமைப்பைக் கண்டித்து அந்நிய நாட்டு குளிர்பானங்களான கோக், பெப்சியை தமிழகத்தில் விற்பனை செய்யக் கூடாது என போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்து பானங்களைப் புறக்கணித்தனர்.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பெப்சி, கோக் விற்பனை செய்யப்படாது என்று வணிகர் சங்க பேரவை அறிவித்திருந்தது. எனினும் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பெப்சி, கோக் தமிழகத்தில் மீண்டும் விற்பனையாகத் தொடங்கியிருந்தது.

இந்த நிலையில், விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளையன் எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் தமிழகத்தில் அனைத்து கடைகளிலும் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களுக்குத் தடை விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக் குளிர்பானங்களுக்குப் பதிலாக இளநீர், பதநீர் மற்றும் உள்ளூர் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: