ஒப்பந்தத்தைக் கைவிட்டால் அணு ஆயுத எரிபொருளைத் தயாரிப்போம்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

Tuesday, April 24th, 2018

அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகினால், அணு ஆயுதங்களில் எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கேற்ற வகையில் யுரேனியத்தை செறிவூட்டும் பணியை மீண்டும் ஆரம்பிப்போம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்கா சென்றுள்ள ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஸரீஃப்  நியூயார்க் நகரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது –

அணுசக்தி தொடர்பாக ஈரானுக்கும், வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து விலகப் போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார்.

அவ்வாறு அவர் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகினால், அதற்கான எதிர் நடவடிக்கைகள் குறித்து தற்போதே ஆலோசித்து வருகிறோம். அந்த ஒப்பந்தம் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அத்தகைய எதிர் நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

அதற்காக, ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கிவிடும் என்று அமெரிக்கா அச்சப்படத் தேவையில்லை. இருந்தாலும், அணு ஆயுதத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் யுரேனியத்தை செறிவூட்டும் பணியில் ஈரான் தீவிரமாக ஈடுபடலாம் என்றார் அவர்.

தனது அணுசக்தித் திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரானும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள வல்லரசு நாடுகளும் ஒப்புக் கொண்டு, இருதரப்பினருக்கும் இடையே ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒபாமா அதிபராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சியின் பலனாக உருவான இந்த ஒப்பந்தம், அமெரிக்கா மேற்கொண்டதிலேயே மிகவும் மோசமான ஒப்பந்தம் என்று தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்து வருகிறார்.

மேலும், தான் ஆட்சிக்கு வந்தால் ஈரானுடான அணுசக்தித் திட்டத்தைக் கைவிடப்போவதாக அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன்படி, ஈரான் அணுசக்தி ஒப்பத்தில் உள்ள குறைபாடுகள் களையப்பட வேண்டும்; அல்லது ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிவிடும் என்று அண்மையில் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தால்.

இந்தச் சூழலில், அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: