ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் புதிய ‘ஜிகாதி ஜான்’ இந்தியர்?

Friday, May 6th, 2016
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் புதிய ‘ஜிகாதி ஜான்’ ஆக செயல்படுபவர் இந்தியர் என தெரியவந்துள்ளது.

சிரியா, ஈராக்கில் பல்வேறு பகுதிகளை தங்கள்வசம் கொண்டுவந்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் சர்வதேச நாடுகளின் படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை கொடூரமாக கொன்று வருகின்றனர்.

ஜிகாதி ஜானை குறிவைத்து சிரியாவின் வடக்கில் உள்ள ரக்கா நகரில் அமெரிக்க போர் விமானங்கள் கடந்த நவம்பர் மாதம் தாக்குதல் நடத்தின.. இந்த தாக்குதலில் ஜிகாதி ஜான் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாயின. ஜிகாதி ஜான் கொல்லப்பட்டதை ஐ.எஸ் தீவிரவாத இயக்கமும் உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் ஐ.எஸ் அமைப்பின் புதிய ஜிகாதி ஜானாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் சித்தார்த்தா என்பவரை மூத்த தளபதி ஒருவர் அறிவித்துள்ளார். லண்டனில் வசித்து வரும் சித்தார்த்தா இந்து மதத்தை சேர்ந்தவர். இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ள சித்தார்த்தாவின் தற்போதைய பெயர் அபுதர்.

தொடர்ந்து 2014ம் ஆண்டு மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து கொண்டு, பிரிட்டனிலிருந்து சிரியாவுக்கு சென்ற இவர் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ளார்.படிப்படியாக ஐஎஸ் தீவிரவாதிகளின் நன்மதிப்பை பெற்ற சித்தார்த்தா, தற்போது புதிய ஜிகாதி ஜானாக உருவெடுத்துள்ளார். சமீபத்தில் ‘பிரிட்டன் உளவாளிகள்’ கொல்லப்பட்டதாக ஐஎஸ் வெளியிட்ட புதிய வீடியோவில் முகமூடியுடன் தோன்றி பேசியவர் சித்தார்த்தா என்பது தெரியவந்துள்ளது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஐஎஸ் தீவிரவாதிகளால் பாலியல் அடிமையாக கடத்திச் செல்லப்பட்ட யாஷ்டி இன இளம்பெண் நிஹாத் பராகத் என்பவர் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், கிர்குக்கில் நான் பிடிபட்டதும் மொசூலில் உள்ள தீவிரவாத தலைவனிடம் என்னை அழைத்துச் சென்றனர். அவன் பெயர் அபுதர். அவனிடம் யாஷ்டி இனத்தை சேர்ந்த பெண்கள் பலர் இருந்தனர் என தெரிவித்துள்ளார். இந்த பெண்ணை பேட்டி எடுத்த நபரும் சித்தார்தா என்பவரே தீவிரவாத இயக்கத்தில் இணைந்தவுடன் அபு தர் என்ற பெயரில் கொடூரங்களை செய்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்த பெண்ணை பேட்டி எடுத்த ஜோசப் ஹயாத் என்பவர், ஐஎஸ் அமைப்பில் முக்கிய தலைவராக இருந்த முகமது இம்வஸி உயிரிழந்த பின், அபுதர் என்ற சித்தார்த்தா தான் அந்த பதவிக்கு வந்ததாகவும், பிரிட்டன் அரசால் தேடப்பட்டு வருபவரும் அவர் தான் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

Related posts: