ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியேறும் நடைமுறைகளை தாமதிக்கும் பிரித்தானியா – எச்சரிக்கும் ஜேர்மனி!

Saturday, November 5th, 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் நடைமுறைகளை தாமதிக்காமல் தொடங்க வேண்டும் என பிரித்தானியாவுக்கு ஜேர்மனி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள் பிரித்தானியாவில் வந்து குடியேறுவதாகவும், இதன் காரணமாக பிரித்தானிய மக்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அந்நாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய அரசு வெளியேறுவதா, வேண்டாமா என்பது குறித்து வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியேறுவதற்கு ஆதரவாக 52 சதவீத மக்கள் வாக்களித்தனர். இதையடுத்து பிரித்தானிய அரசு பிரிவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியது.இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் விதியை பிரித்தானியா அரசாங்கம் மீற முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த பிரித்தானிய உயர் நீதிமன்றம், அரசாங்கம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற முடியாது என்றும் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெறவேண்டியது அவசியம் என்று கூறி தீர்ப்பளித்தது.

தற்போது ஜேர்மன் சென்ற பிரித்தானிய வெளி விவகாரத்துறை செயலாளர் போரிஸ் ஜான்சன், பெர்லின் நகரில் ஜேர்மன் வெளி விவகாரத்துறை மந்திரி ஸ்டெயின்மியரை சந்தித்து கலந்துரையாடினார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் ஸ்டெயின்மியர் கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் நடைமுறைகளைத் தொடங்குவதற்கு பாராளுமன்ற ஒப்புதல் தேவை என பிரித்தானிய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தாமதம் செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.நீதிமன்றம் முடிவு செய்தபோதிலும், பிரித்தானிய பாராளுமன்றத்தில் இந்த வாரம் ஆலோசித்து பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் பிரித்தானிய அரசாங்கம் நிர்ணயித்துள்ள கால அட்டவணையில், நீதிமன்ற தீர்ப்பு குறுக்கிடும் என்று நினைக்கவில்லை என பிரித்தானிய வெளி விவகாரத்துறை செயலாளர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

univesity copy

Related posts: