ஐதராபாத்தில் 7 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்வு, உரிமையாளர் கைது!

ஐதராபாத்தில் 7 மாடி கட்டிடம் இடிந்து விபத்து நேரிட்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது. கட்டிடத்தின் உரிமையாளரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நனகராம்குடா என்ற இடத்தில் வியாழன் இரவு திடீரென 7 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் காயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த மீட்புப்படையினர் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்க கூடும் என்று அஞ்சப்பட்டது. கட்டிடத்திற்குள் 5 குடும்பத்தினர் இருந்தாதாக கூறப்பட்டது. தேசிய பேரிடம் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டிட கட்டப்பட்டதில் பல்வேறு விதிமுறை மீறல்கள் நடைபெற்றுள்ளதாக துணை கமிஷனர் விஷ்வ பிரசாத் தெரிவித்தார். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். ஏழு பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விபத்து நேரிட்ட பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்றது.
நேற்று இரவு மட்டும் 4 சடலங்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 11 ஆக உயர்ந்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்த ரேகா என்ற 35 வயது பெண்ணும், அவரது 4 வயது மகனும் உயிருடன் மீட்கப்பட்டனர். இவர்கள் சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் கட்டிடத்தில் பணிபுரிந்த பணியாளர்கள், கட்டிடத்தின் அடித்தளத்தில் தங்கியிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. உயிர் பிழைத்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
உயிரிழந்தோர்களின் சடலங்களை அவர்களது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல தேவையான ஏற்பாடுகளை மாநில அரசு செய்து உள்ளது.
இதற்கிடையே விபத்து சம்பவம் தொடர்பாக கட்டிடத்தின் உரிமையாளரை போலீசார் கைது செய்து உள்ளனர் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Related posts:
|
|