ஏமனில் மோசமாகும் நிலைமை: 7,500 சிறுவர்கள் பலி!

Monday, July 1st, 2019

மத்திய கிழக்கு நாடான ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் 7,500-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்ததாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்தரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஏமன் உள்நாட்டுப் போரில் 7,500-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏமனில் 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி புரிந்த அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக, கடந்த 2011ம் ஆண்டு மக்கள் போராட்டம் வெடித்தது. அதனைத் தொடர்ந்து, அதிபர் பொறுப்பேற்ற மன்சூர் ஹாதியால் உறுதியான ஆட்சியைத் தர முடியவில்லை.

இந்த நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏமனில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியதுடன், தலைநகர் சனாவை கடந்த 2014 ம் ஆண்டு கைப்பற்றினர். அதையடுத்து, மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி அரேபிய கூட்டுப் படை கடந்த 2015 ம் ஆண்டு முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: ஏமன் உள்நாட்டுப் போரில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் திகதியிலிருந்து, 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை சிறுவர்களுக்கு எதிராக 11,779 குற்றச் செயல்கள் நடைபெற்றுள்ளன. இந்தச் செயல்களில், 7,500-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்தனர்.

இதுதவிர, சிறுவர்களை போரில் ஈடுபடுத்துவது, எதிர்க் குழுவினருடன் தொடர்புடைய சிறுவர்களைக் கடத்திச் செல்வது போன்ற குற்றங்களும் நடைபெற்றுள்ளன.

ஏமன் போரில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை மிகத் துல்லியமாக கண்காணிப்பது இயலாது என்பதால், இந்த புள்ளிவிவரங்களை விட உண்மை நிலவரம் மிகவும் மோசமானதாக இருக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: