எல்லைப்பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றும் பணி ஆரம்பம்!

Wednesday, October 3rd, 2018

வட கொரிய மற்றும் தென் கொரிய எல்லைப்பகுதிகளில் பதிக்கப்பட்டுள்ள 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் இருநாட்டு இராணுவ வீரர்களும் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம், வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன், தென் கொரிய தலைவர் மூன் ஜே-இன்னுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது, இருநாட்டு எல்லையில் பதிக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை நீக்குவதற்கு முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தென் கொரியா தனது அதிகபட்ச இராணுவத்தை குவித்துள்ள பன்முஞ்சோம் கிராமத்திலுள்ள கண்ணிவெடிகளை நீக்கும் பணிகளும் ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், கொரிய போரின்போது நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சுரங்கங்களும் அழிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டு பாதுகாப்பு பகுதியில் (ஜேஎஸ்ஏ) உள்ள படைகளற்ற மண்டலத்தில் (டிஎம்ஜீ) இருநாட்டு இராணுவ வீரர்களும் சந்தித்துக்கொள்ளும் இடத்தில் பதிக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் அடுத்த 30 நாட்களுக்குள் அகற்றப்படும் என்று தென் கொரியாவின் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.