எரிபொருட்கள் மீதான கூடுதல் வரி 06 மாதங்களுக்கு இரத்து!

Wednesday, December 5th, 2018

பிரான்ஸ் நாட்டு மக்களின் தொடர் போராட்டம் காரணமாக டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான கூடுதல் வரியை 06 மாதங்களுக்கு இரத்து செய்வதாக பிரதமர் எடோவிட் பிலிப் அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளுக்கான செலவினங்களுக்காக பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரி விதிக்கப்பட்டது.

இந்த வரிவிதிப்பினால் ஏற்பட்ட டீசல் விலை உயர்வை எதிர்த்து பிரான்சில் கடந்த 3 வாரங்களாக பொதுமக்கள் மஞ்சள் நிறத்தில் மேலாடைகளை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு கருதி தலைநகர் பாரிசில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சாம்ஸ் எலிசீசை பொலிசார் மூடினர். மேலும் அங்குவந்த பொதுமக்களை சோதனை செய்தனர்.

இதனால் பொலிசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை முன்கூட்டியே எதிர்பார்த்து பல கடைகள், வங்கிகள் மற்றும் ஓட்டல்கள் மூடப்பட்டன.

இதற்கிடையே, பொலிசார் மீது போராட்டக்காரர்கள் மஞ்சள் நிற பெயிண்டை வீசினர். அதனால் வன்முறை வெடித்தது. எனவே அவர்களை கலைக்க பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.