எனக்குரிய காலம் விரைவில் வரும்! – தீபா

Wednesday, January 11th, 2017

அ.தி.மு.க தொண்டர்கள் அடிபணிந்து வணங்க இன்னொரு பால்கனி கிடைத்திருக்கிறது. அது, சென்னை தி.நகரில் இருக்கும் தீபா வீட்டு பால்கனி.

ஜெ. மறைவுக்குப் பின், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற சசிகலா, தன் கன்னி உரையைக் கண்ணீர் கலந்து வாசித்தார். ஆனாலும் அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்களை அது ஈர்க்கவில்லை.

‘ஜெயலலிதாவுக்கு உண்மையில் என்ன நடந்தது?’, ‘சசிகலாவை பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டிய காரணம் என்ன?’, ‘அமைச்சர்களும் நிர்வாகிகளும் மட்டுமே கட்சிக்குப் போதுமா?’ என்ற கேள்விகள் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளன.

இதனால் பலரும் குழப்பத்திலும் கோபத்திலும் இருக்கிறார்கள். எனவேதான், சசிகலா பேனர்களைக் கிழிப்பது, சாணம் அடிப்பது போன்ற காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொள்ளாத, சசிகலாமீது கோபமாக உள்ள தொண்டர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவை அரசியலுக்கு வருமாறு அழைக்கிறார்கள்.

அ.தி.மு.க-வின் முன்னாள் மாவட்டச் செயலாளர்கள், முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள் எனப் பலரும் தீபாவைச் சந்தித்து வருகிறார்கள். கிராமப்புறங்களில் தீபாவுக்கு ஆதரவாகத் தொண்டர்களைச் சேர்க்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

சசிகலாவுக்கு ஆதரவாக வைக்கப்பட்டு உள்ள பேனர்களுக்கு அருகிலேயே தீபாவை ஆதரிக்கும் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. சசிகலாவின் மீதான வெறுப்போடு இருக்கும் அ.தி.மு.க தொண்டர்கள், தினமும் தீபா வீட்டின் முன்பாகத் திரண்டு வருகிறார்கள்.

அவர்களின் சட்டைப் பாக்கெட்டுகளில் ஜெயலலிதா மற்றும் தீபா ஆகியோரின் புகைப்படங்கள் பளிச்சிடுகின்றன. பலர் தங்கள் செல்போன்களில் தீபாவின் படத்தை வால்பேப்பராக வைத்துள்ளனர்.

பல ஊர்களிலும் தீபா படங்களோடு போஸ்டர்கள் முளைக்கின்றன. சிலர் இன்னும் ஒருபடி மேலே போய், புதுக் கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகமே செய்திருக்கிறார்கள்.

‘அம்மாவின் இரத்தமே… எங்களைக் காக்க வா!’ என்று தீபா வீட்டு முன்பாக கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்த சிலரிடம் பேசியபொது…..

‘அம்மா நல்லபடியாக இருந்திருக்க வேண்டியவர். இப்போ அ.தி.மு.க-வுல நடக்குறதப் பார்த்தா, பதவிக்காகத்தான் பல சூழ்ச்சிகள் செஞ்சிருக்காங்கனு தெரியுது. அம்மா கூடவே இருந்து குழி பறிச்சிட்டாங்க.

அம்மா தன் வாழ்நாள் முழுக்க கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி இப்போ வீணாப் போயிடுமோனு பயமா இருக்கு. அதனாலதான், அ.தி.மு.க-வோட உண்மையான தொண்டர்களான நாங்க, அம்மாவின் வாரிசான தீபாவை தலைமை ஏற்க வெச்சு கட்சியை வளர்க்க முடிவு செஞ்சுட்டோம். தினமும் அவங்களைப் பார்த்து ‘சீக்கிரமே அரசியலுக்கு வரணும்’னு கோரிக்கை வெக்கிறோம். அம்மாவின் மக்கள் பணியை தீபாவால்தான் நிறைவேத்த முடியும். நாங்க அவருக்குப் பக்கபலமா இருப்போம்’’ என்றார்கள்.

இந்தச் சூழலில், தீபாவிடம் சில கேள்விகளை முன்வைக்கப்பட்டது.

‘‘ஆரம்பத்தில் பரபரப்பாகச் செயல்பட்ட நீங்கள் இப்போது தயங்குவது போலத் தெரிகிறதே?’’

‘‘அந்தத் துடிப்பு இன்னும் அப்படியேதான் இருக்கிறது. எடுத்தோம் கவிழ்த்தோம்னு செய்யக் கூடாது. நிதானமா யோசிச்சு செய்யணும். அடுத்து என்ன செய்யணும், எந்த மாதிரியான நேரத்துல இறங்கணும்னு ஒரு முடிவோட இருக்கேன். அதனால என் வேகம் குறைஞ்ச மாதிரி தெரியுது.

நான் சீறும் காலம் சீக்கிரம் வரும். அப்போ, நான் யார்னு எல்லோருக்கும் தெரியும்!” ‘‘உங்கள் வீடு தேடி வரும் தொண்டர்களுக்கு இதுவரை எந்தப் பதிலும் நீங்கள் சொல்லவில்லையே?’’ ‘

‘என்னைத் தேடிவரும் தொண்டர்களை நான் மதிக்கிறேன். இனி, எனக்கு எல்லாமே அவங்கதான். என்னை நம்பி வந்தவங்களுக்கு நான் நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன். அவங்களுக்காகக் கட்சிப் பணி ஆற்ற கண்டிப்பா வருவேன். தமிழக மக்களையும், அம்மாவின் கட்சியையும் காப்பாத்த வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்குது. அதனால, வெகுசீக்கிரமே என் தொண்டர்களுக்கு நல்ல பதிலைச் சொல்வேன்.’’

“ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகப் பலரும் சொல்கிறார்கள். ஆனால், நீங்கள் அதைப் பற்றி வாய் திறக்கவில்லையே?’’

‘‘நான் அதுபத்தி எதுவும் சொல்ல விரும்பலை. அத்தை (ஜெயலலிதா) இறந்துட்டாங்க… அவ்ளோ தான். அதிலிருந்து இன்னும் நான் மீண்டு வரலை.’’

‘‘இதுபற்றிப் பேச வேண்டாம் என உங்களுக்கு ஏதேனும் மிரட்டல்கள் உள்ளனவா?’’

‘‘யாரும் மிரட்டினா, பயப்படுற பொண்ணில்லை நான். என்னை யாரும் மிரட்டவும் இல்லை. தொண்டர்கள் இருக்கும்போது எதுக்காக நான் பயப்படணும்?’’ ‘‘சசிகலா முதல்வராகப் பதவியேற்க அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?’’

‘‘அவரைப்பத்தி நான் எதுவும் பேச விரும்பலை. இப்போதைக்கு எனக்குத் தேவை உண்மையான தொண்டர்கள் மட்டும்தான்.’’

தீபா வீட்டு வாசலில் திரளும் கூட்டமும், பால் கனிக்கு வந்து வணங்கி தீபா நிகழ்த்திய உரையும் தமிழக அரசியலில் புதிய திருப்பத்துக்குப் பிள்ளையார் சுழி போடுமா?

எம்.ஜி.ஆர் பிறந்த நாளான ஜனவரி 17-ம் தேதியை எதிர்பார்த்து, நகம் கடித்தபடி காத்திருக்கிறார்கள் அ.தி.மு.க-வினர். (நன்றி இணையம்)

1483848876-4185

Related posts: