‘உக்ரைன் போர் முடிவு’ அமைதிப்பேச்சு – ரஷ்யா வெளியிட்ட உறுதியான சமிக்ஞை!

Saturday, December 3rd, 2022

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினை சந்திக்க தாம் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவரும் ஆர்வம் விளாடிமீர் புடினுக்கு இருந்தால், தாம் அவரை சந்திக்க முடியும் எனவும் அவ்வாறான ஆர்வம் ரஷ்ய அதிபருக்கு இதுவரை இருக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரனுடன் இணைந்து ஜோ பைடன் இன்று ஊடக சந்திப்பொன்றில் பங்கேற்றிருந்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அமெரிக்க மற்றும் பிரான்ஸ் அதிபர்கள், ரஷ்யாவின் போருக்கு எதிராக தொடர்ந்தும் செயற்படுவதாக உறுதி அளித்துள்ளனர்.

இதற்கு பதில் அளித்த ரஷ்ய அரசாங்கத்தின் பேச்சாளர், ரஷ்யாவின் நலன்களை உறுதி செய்யும் வகையில் நடத்தப்படும் பேச்சுக்களுக்கு விளாடிமீர் புடின் தயாராகவே இருப்பதாக கூறியுள்ளார்.

எனினும் அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்பதற்கு ரஷ்யா நிச்சயமாக தயாராக இல்லை என ரஷ்ய அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் திமித்ரி பெஸ்கோவ் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையில் ஜோ பைடன் என்ன கூறினார் எனக் கேள்வி எழுப்பியுள்ள திமித்ரி பெஸ்கோவ், ரஷ்யா, உக்ரைனை விட்டு வெளியேறும் பட்சத்திலேயே விளாடிமீர் புடினுடன் பேச்சுக்கள் சாத்தியமாகும் என கூறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

பேச்சுக்களுக்கான பரஸ்பர அடிப்படைக்கான தேடலை ஜோ பைடனின் நிலைப்பாடு சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் ரஷ்ய அரசாங்கத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே உக்ரைனை சமரசம் செய்யுமாறு வலியுறுத்த மாட்டோம் என்ற விடயத்தில் ஜோ பைடனும் தாமும் இணங்கியுள்ளதாக இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரன் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் உக்ரைனில் அமைதியை ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுவதற்கான நேரம் வந்துவிட்டதாக இத்தாலிய வெளிவிவகார அமைச்சர் அன்டோனியோ தஜானி கடந்த வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.

எனினும் இது உக்ரைன் சரண் அடைவதாக அமையக் கூடாது என்பதுடன், அதன் சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் மக்கள் மீது குண்டு வீசிவதற்கு பதிலாக உறுதியான சமிக்ஞைகளை ரஷ்யா வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: