உக்ரைன் நாட்டில் 30 நாட்களுக்கு இராணுவச் சட்டம் அமுலில்!

Wednesday, November 28th, 2018

ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் நாட்டில் இன்று முதல் 30 நாட்களுக்கு இராணுவச் சட்டம் அமுல்ப்படுத்தப்படுகிறது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த 2014-ல் ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியது.

கிரிமியா அருகே உள்ள கெர்ச் ஜலசந்தியை உக்ரைன் கப்பல்கள் கடந்தபோது, தங்கள் பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி இந்த நடவடிக்கையை ரஷ்ய இராணுவம் எடுத்திருக்கிறது.

அந்த பகுதியில் ரஷ்யா தனது டேங்கர் கப்பலை நிறுத்தி உள்ளதுடன் ரஷ்ய போர் விமானங்களும் அந்த பகுதியில் பறக்கின்றன. உக்ரைன் கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியதால் அசோவ் கடற்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், உக்ரைனின் ரஷ்ய எல்லையில் உள்ள குறிப்பிட்ட பிராந்தியங்களில் இராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கக்கூடிய இராணுவச் சட்டத்தை அமுல்ப்படுத்த உக்ரைன் அரசு முடிவு செய்தது.

இதற்காக பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டதுடன், விவாதத்திற்கு பிறகு மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மசோதாவை நிறைவேற்ற 226 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், மசோதாவிற்கு ஆதரவாக 276 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் 30 நாட்களுக்கு ராணுவச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட உள்ளது.

Related posts: