உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து ௲ அமைச்சர் உள்ளிட்ட 16 பேர் உயிரிழப்பு!

Thursday, January 19th, 2023

உக்ரைன் தலைநகர் கீவின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள முன்பள்ளி அருகே ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் உக்ரைனின் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைன் தலைநகரின் கிழக்கு புறநகர்ப் பகுதியான ப்ரோவரியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் 2 குழந்தைகளும் அடங்குவதாகவும், மேலும் 10 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குப் பின்னர் முன்பள்ளிக்கு அருகில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அதிலிருந்த குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, பிரதியமைச்சர் யெவன் யெனின் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மாநில செயலாளர் யூரி லுப்கோவிச் ஆகியோரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது விபத்தா அல்லது ரஷ்யாவுடனான 11 மாத யுத்தத்தின் விளைவாக ஏற்பட்டதா என்பது குறித்து உடனடி தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts: