இஸ்ரேலுக்கு நேரடி விமானங்களை இயக்க ‘எதிஹாட் எயார்வேஸ்’ விமான நிறுவனம்!

Wednesday, November 18th, 2020

இஸ்ரேலுக்கு நேரடி விமானங்களை இயக்க ஐக்கிய அரபு அமிரகத்தின், ‘எதிஹாட் எயார்வேஸ்’ விமான நிறுவனம், முடிவு செய்துள்ளது.

இதன்படி அடுத்த ஆண்டு மார்ச், 28ஆம் திகதி முதல், அபுதாபியில் இருந்து, இஸ்ரேலின் டெல் ஆவிவிற்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான இராஜாங்க ரீதியிலான மோதல் முடிவுக்கு வந்தது.

ஆம்! இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லுறவு ஒப்பந்தம், வெள்ளை மாளிகையில் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி கையெழுத்தானது.

இதையடுத்து, இஸ்ரேலில் இருந்து ஐக்கிய அரபு அமிரகத்துக்கு விமான சேவை துவங்கப்பட்டது. இஸ்ரேலிலிருந்து முதல் நேரடி வணிக விமானம், ஒகஸ்ட் 31ஆம் திகதி அபுதாபியில் தரையிறங்கியது.

இந்த விமானத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் உயர்மட்ட உதவியாளர்கள் டெல் அவிவிலிருந்து ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபிக்கு பயணம் செய்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முயற்சியால் இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் ஜோர்தான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட நாடு என்ற பட்டியலில் அமீரகம் இணைந்துள்ளது. வளைகுடா நாடுகளில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் நாடு என்ற பெருமையையும் அமீரகம் பெற்றுள்ளது.

Related posts: