இருபெரும் வல்லரசு தலைவர்களால் கூடங்குளம்  அணு உலைகளின் கட்டுமானப் பணிகள் ஆரம்பித்துவைப்பு!

Saturday, October 15th, 2016

கூடங்குளத்தில் அமையவிருக்கும் அணு உலைகளின் கட்டுமானப் பணிகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் இன்று சனிக்கிழமை, காணொளிக் காட்சி மூலம் துவக்கிவைத்தனர்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் உச்சி மாநாடு கோவா நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் கலந்துகொண்டுள்ளார்.

இந்தியா – ரஷ்யா இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் இன்று காலையில் துவங்கின. இந்த நிலையில், இந்தியப் பிரதமர் மோதியும், ரஷ்ய அதிபர் புதினும் காணொளிக் காட்சி மூலம் கூடங்குளத்தில் அமையவிருக்கும் மூன்றாவது, நான்காவது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகளைத் துவக்கிவைத்தனர்.

இதற்குப் பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோதி, இந்திய நலன்களுக்கு முரணாக ரஷ்யா எதனையும் செய்யாது என்று குறிப்பிட்டார். ரஷ்ய ஒத்துழைப்புடன் மேலும் 8 அணு உலைகள் கட்டப்படும் நிலையில், அணுசக்தி விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு இருதரப்புக்குமே பலனளிக்கும் என மோதி தெரிவித்தார்.

_91938258_0.40919300_1476522294_innr1