இராணுவ ரகசியத்தை விற்க முயன்றார் சுவாதி – ராம்குமாரின் தாய் தகவல்!
Sunday, August 21st, 2016
கடந்த ஜுன் மாதம் 24ஆம் தேதி, சென்னை சூளைமேட்டை சேர்ந்த பெண் இன்ஜினியர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
அந்த கொலை தொடர்பாக, செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்தான் அந்த கொலையை செய்தார் என்றும், இதை அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டார் என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், திடீர் திருப்பமாக, சுவாதியை நான் கொலை செய்யவில்லை. போலீசார் என்மீது பொய்யாக வழக்கு தொடர்ந்துள்ளனர் என்று ராம்குமார் சமீபத்தில் நீதிமன்றத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ போலீசார் விசாரிக்க வேண்டும் என்று அவரின் தாய் புஷ்பம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
“நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட போது, சிலர் கொலையாளியை துரத்தினர் என போலீசார் கூறினர். அதன்பின், சுவாதியின் 14 சிம் கார்டுகள் மற்றும் அவரின் லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலையில், சுவாதியின் நண்பர் பிலால் சித்திக் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. அவரிடம் போலீசார் விசாரணையும் நடத்தினார்கள். குறிப்பாக, பெங்களூர் சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் அந்த தகவல்களை போலீசார் வெளியிடவில்லை. சுவாதி கொலை காதல் அல்லது வேறு காரணங்களுக்காகவும் நடந்திருக்கலாம்.
கொலை சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, அதே ரயில் நிலையத்தில் ஒருவர் சுவாதியின் கன்னத்தில் அறைந்துள்ளார். அதை நேரில் பார்த்த சாட்சியும் இருக்கிறது. அதேபோல், மதுரை மற்றும் ஒட்டன்சத்திரத்தில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். ஆனால் அதுபற்றி போலீசார் எதுவும் கூறவில்லை. இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒருவரை காதல் திருமணம் செய்வதற்காக, சுவாதி மதம் மாறினார் என்பதையும் பெங்களூர் சென்றிருந்த போது போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.
அதேபோல், சுவாதியின் மரணம் குறித்து தன் குடும்பத்தினரிடம் விசாரிக்க வேண்டாம் என சுவாதியின் தந்தை முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்துள்ளார். அதனால், போலீசார் அவர்களை விசாரிக்கவில்லை. சுவாதி பெங்களூரில் பணியாற்றிய போது, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ரகசியங்கள் மற்றும் இந்திய ராணுவ ரகசியங்களை விற்க முயன்றார் என்று பெங்களூரில் உள்ள ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டது என்பதை போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், போலீசார் எல்லாவற்றையும் மறைத்துள்ளனர்.
போலீசார் என் மகன் ராம்குமாரை குற்றவாளி ஆக்கியுள்ளனர். மிகவும் மோசமான புலன் விசாரணை நடந்து வருகிறது. தமிழக போலீசார் இந்த வழக்கை விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்” என்று அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|