இராணுவ உதவி செய்யுமாறு சீனாவிடம் ரஷ்யா கோரியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்த செய்தியை நிராகரித்தது சீனா!

Tuesday, March 15th, 2022

உக்ரைன் மீதான போருக்கு இராணுவ உதவி செய்யுமாறு சீனாவிடம் ரஷ்யா கோரியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்த செய்தியை நிராகரித்துள்ள சீனா, இது ஒரு தவறான செய்தியென கண்டனம் செய்துள்ளது.

அத்துடன் தீங்கிழைக்கும் பொய் தகவல்களை அமெரிக்கா பரப்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் தற்போது மேற்குப் பிராந்தியத்துக்கும் விரிவடைந்துள்ள நிலையில், இன்று காலை தலைநகர் கியேவின் வடக்கு புறநகர்ப்பகுதியில் உள்ள அன்டோனோவ் விமானங்களின் உற்பத்திக்கூடம் ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது.

நேற்று போலந்து எல்லைக்கு அருகில் உள்ள பெரிய இராணுவ தளம் தாக்கபட்ட நிலையில், இன்று கியேவ் நகர மையத்திலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள இந்த உற்பத்திக்கூடமும் வான்தளமும் தாக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு வழங்கப்படும் மேற்குலகின் ஆயுத உதவிகளும் இலக்குவைக்கப்படுமென ரஷ்யா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில், போலந்து எல்லைக்கு அருகே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் சீனாவிடம் ரஷ்யா இராணுவ உதவியை கோரியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்த செய்தி சீனாவின் கண்டனத்தை பெற்றுள்ளது.

இன்று இத்தாலிய தலைநகர் ரோமில் அமெரிக்க சீன அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் நிலையில், ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா வான்கலங்கள் மற்றும் பொருளாதார உதவியை சீனாவிடம் இருந்து ரஷ்யா கோரியுள்ளதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டிருந்தது.

அத்துடன் ரஷ்யாவுக்கு உதவினால் பின் விளைவுகள் ஏற்படும் என சீனாவுக்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தது.

இந்த நிலையில் இது ஒரு தவறான செய்தி என இன்று அறிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சக பேச்சாளார், இந்தப் பிரச்சினையில் சீனா அமைதியை வலியுறுத்தி பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்புவிடுக்கும் நிலையில் ரஷ்யா உதவிகோருவதான தீங்கிழைக்கும் பொய் தகவல்களை அமெரிக்கா பரப்புவதாக குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: