இரண்டு நாட்களில் ‘180க்கு அதிகமான மக்கள் பலி!

Tuesday, August 16th, 2016

அண்மைய நாட்களில், மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில், எதிரணி, சிரிய அரசாங்க தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் செயற்பட்டாளர்கள் குழுக்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை (12) முதல், சிறுவர்கள் 22 பேர், பெண்கள் 23 பேர் உள்ளடங்கலாக 180க்கு அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஒருங்கிணைப்பு செயற்குழுக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) தெரிவித்துள்ளன.

குறைந்தது 90 பேர் வெள்ளிக்கிழமை (12) கொல்லப்பட்டதுடன், சனிக்கிழமை (13) இரவு, பொதுமக்கள் 83 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான உயிரிழப்புகள், அலெப்போ மாகாணத்திலேயே இடம்பெற்றுள்ளன.

அலெப்போவில் மாத்திரம், கடந்த 15 நாட்களில், சிறுவர்கள் 76 பேர், பெண்கள் 41 பேர் உட்பட  பொதுமக்கள் 327 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் ஞாயிற்றுக்கிழமை (14) தெரிவித்துள்ளது. இதில், 100க்கு மேற்பட்ட உயிரிழப்புகள், அரசாங்க போர் விமானங்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ பகுதிகளில் எதிரணி போராளிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 126 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சிரியாவிலிருந்து துருக்கிக்குள் செல்லும் எல்லைப் பகுதிக்கு அண்மையாக வைத்து, பஸ்ஸொன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதோடு, 25 பேர் படுகாயமடைந்தனர் என, மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. சிரிய சிவில் யுத்தத்தில் போரிட்டுக் கொண்டிருக்கும் போராளிகளையே, இந்த பஸ் ஏற்றிச் சென்றுகொண்டிருந்ததாக, அக்கண்காணிப்பகம் தெரிவித்தது.

Related posts: