இரண்டாவது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பிற்கான மசோதா தாக்கல் செய்யப்படும்: ஸ்காட்லாந்து முதல்வர்!
Thursday, October 13th, 2016ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து ஸ்காட்லாந்து விடுதலைக்கான இரண்டாவது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக ஸ்காட்லாந்தின் முதல்வர், நிக்கோலா ஸ்டர்ஜன் உறுதிப்படுத்தியுள்ளார்.
கிளாஸ்கோவில் நடைபெற்ற அவரது கட்சியான, ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி மாநாட்டின் போது, ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பிற்கான மசோதா அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.இரண்டாவது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவதற்கு இது முதல் படியாக பார்க்கப்படுகிறது.
2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் கருத்தறியும் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், 55% வாக்காளர்கள், ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து வெளியேற வேண்டாம் என்பதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
கிளாஸ்கோவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நிக்கோலா ஸ்டர்ஜன், ஐக்கிய ராஜ்ஜியத்துடன் இணைந்திருப்பதால் எதிர்காலத்தில் ஸ்திரமற்ற சூழல் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கும்பட்சத்தில் மேலும் சிறந்த வழிகளை நாட ஸ்காட்லாந்திற்கு முழு உரிமை உண்டு என்றார்.
கடந்த ஜூன் 24 ஆம் தேதி, ஐரோப்பா ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வாக்களித்த மறுநாள், இரண்டாவது ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடக்கும் சாத்தியக்கூறு வெகுவாக இருப்பதாக நிக்கோலா கருத்து தெரிவித்திருந்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இணைத்திருக்க வேண்டும் என்று ஸ்காட்லாந்தில் உள்ள 62% வாக்காளர்களும், வேண்டாம் என்று 38% வாக்காளர்களும் வாக்களித்திருந்தனர்.ஆனால், ஐக்கிய ராஜ்ஜியம் முழுவதுமாக, 48% வாக்காளர்கள் இணைந்திருக்க கோரியும், 52 % வாக்காளர்கள் ஒன்றியத்திலிருந்து வெளியேறி கோரியும் வாக்களித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|