இந்தோனேஷிய சுனாமிக்கு பலியானோரின் எண்ணிக்கை 384 ஆக உயர்வு!

இந்தோனேஷியாவின் மையப் பகுதியில் வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கமும், அதனைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இதில் பலியானோரின் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளது.
சுலாவேசி தீவுப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அலைகள் எழுந்தன. சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட பலரது உடல்கள் கடற்கரையில் ஒதுங்கியிருப்பதை அடுத்து பலி எண்ணிக்கை கிட்டத்தட்ட 400 ஆக உயர்ந்திருப்பதாக தேசிய பேரிடர் அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
காயமடைந்து மருத்துவமனைகளுக்கு வரும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திணறி வருகின்றன. மீட்புப் பணிகளும் துரித கதியில் நடந்து வருகின்றன.
இந்தோனேஷியாவின் தீவுகளில் ஒன்றான சுலாவெசியில் வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், சுமார் 10 கி.மீ. ஆழத்தில், உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
சுலாவெசி தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துவிட்டன.
நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள், தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி திறந்த வெளியை நோக்கி ஓடினர் என்று தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
சுனாமி: சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்தனர். எனினும், சிறிது நேரம் கழித்து அந்த எச்சரிக்கையை அவர்கள் திரும்பப் பெற்றனர்.
எனினும், இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது. சுனாமி அலைகள் கரை தாண்டி புகுந்து வாகனங்கள் உள்ளிட்ட பொருள்களை அடித்துச் சென்றன.
மேலும், அந்தப் பகுதியைச் சேர்ந்த பலூ நகரின் விமான நிலையமும் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிடுக்கம் சுலாவெஸி மாகாணத்தின் தலைநகரான பலூவிற்கு 78 கி.மீ. தொலைவில் ஏற்பட்டுள்ளது. எனினும், மாகாணத்தின் மிகப் பெரிய நகரமான மக்காசார், அருகிலுள்ள கலியாமந்தன் தீவு ஆகியவற்றிலும் அந்த நிலநடுக்கத்தின் அதிர்வுககள் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
|
|