இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்!

Monday, June 24th, 2019

இந்தோனேஷியாவின் தனிம்பார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் 7.2 ரிக்டர் அளவு கோலில் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இதுவரையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

நிலநடுக்கத்தின் மையப்பகுதி, பப்புவா நியூ கினியாவின் எல்லையான ஜெயபுரா நகரில் உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தினால் விபத்துக்கள் அல்லது கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. எனினும் ஆரம்ப நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மேலும் மூன்று நிலநடுக்கங்கள் இப்பகுதியில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தோனிஷிய நேரப்படி முதலாவது நிலநடுக்கம் இன்று காலை 10.23 மணியளவில் உணரப்பட்ட நிலையில், 23 நிமிடங்களில் ஏனைய 3 நில நடுக்கங்களும் உணரப்பட்டுள்ளது. ஏனைய மூன்று நில நடுக்கங்களும் 5, 5.3 மற்றும் 4.7 ரிக்டர் அளவு கோலில் உணரப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று காலை ஜப்பானிலும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.5 ரிக்டர் அளவு கோலில் அங்கு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கத்தினால் இலங்கைக்கு எதுவும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக இடர்காப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts: