இந்தியாவிற்கு கிடைத்துள்ள பேராதரவு!

Sunday, September 13th, 2020

இந்தியாவிற்கு ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைக்க ஆதரவு அளிப்போம் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளமை சீனாவிற்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

இந்தியாவில் வெளியுறவுக் கொள்கை நாளுக்கு நாள் வலிமை அடைந்து கொண்டே செல்கிறது. அமெரிக்காவுடன் நெருக்கம், ஜப்பான் உடன் ராணுவம் ரீதியான ஒப்பந்தம், இஸ்ரேல் உடன் உடன்படிக்கை, ரஷ்யாவுடன் நட்பு என்று இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மிக வலுவான ஒன்றாக உருவெடுத்துள்ளது.

சீனாவுடன் மோதல் நிலவி வரும் நிலையில் உலக அளவில் இந்தியா முடிந்த அளவு நட்பு நாடுகளை சேகரிக்க பார்க்கிறது. அந்தவகையில் பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளை தன் பக்கம் இழுக்க இந்தியா முயன்று வருகிறது.

அதிலும் பிரான்ஸுடன் பல வருடமாக இந்தியா நெருக்கமான நட்பை கொண்டு உள்ளது. ரபேல் ஒப்பந்தம் காரணமாக இந்தியா – பிரான்ஸ் இடையிலான நட்பு இன்னும் விரிவடைந்து உள்ளது. ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் பிரான்ஸ் நிரந்தர உறுப்பு நாடாகும். இதனால் பிரான்சின் நட்பு இந்தியாவிற்கு முக்கியம்.அதேபோல் போர் வரும் பட்சத்தில் பிரான்சிடம் இருந்து வேகமாக இந்தியா ஆயுதங்கள், போர் கருவிகளை வாங்க முடியும்.

இந்தியா – பிரான்ஸ் நட்பு மிகவும் நெருக்கம் அடைந்துள்ள நிலையில், இந்தியாவிற்கு ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைக்க ஆதரவு அளிப்போம் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி கடந்த பத்தாம் திகதி இந்தியா சென்ற பிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

பல வருடங்களாக நாங்கள் நெருங்கிய நட்பு நாடுகளாக இருக்கிறோம். இந்தியா எங்களுக்கு உதவி இருக்கிறது. கொரோனா காலத்தில் எங்களுக்கு தேவையான மருந்துகளை இந்தியாதான் வழங்கியது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கை மற்றும் உறவு அளப்பரியது. ரபேல் போர் விமானங்களை இந்தியா பெற்றுக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியா தற்போது தற்காலிக உறுப்பினாராக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் இணைந்து உள்ளது. இந்தியாவிற்கு எங்கள் வாழ்த்துக்கள். ஆனால் இந்தியா ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக ஆக வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்தியாவின் இந்த கோரிக்கைக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். ஐநாவில் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சேர்வது மிக அவசியம், என பிரான்ஸ் குறிப்பிட்டுள்ளது.

Related posts: