இணைந்து செயல்பட டிரம்ப்-புதின் விருப்பம்!
Tuesday, July 17th, 2018
சர்வதேச விவகாரங்களில் இணைந்து செயல்படுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா-ரஷியா உறவில் புதிய தொடக்கத்தை ஏற்படுத்தவும் அவர்கள் உறுதி எடுத்துள்ளனர்.
உக்ரைன், சிரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் தொடர்பான விவகாரங்களில் அமெரிக்காவும், ரஷியாவும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று எதிரான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகின்றன. அதேபோல், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபோன்ற காரணங்களினால், தங்கள் நாட்டில் இருந்த ரஷிய தூதரக அதிகாரிகளை அமெரிக்கா அதிரடியாக வெளியேற்றியது.
ரஷியா மீது பல்வேறு தடைகளையும் அமெரிக்கா விதித்தது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்காவுக்கு எதிராக ரஷியாவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதனால், அமெரிக்கா-ரஷியா இடையேயான உறவில் மிகப்பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, அமெரிக்கா-ரஷியா இடையே ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழிகள் குறித்து பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் சந்தித்துப் பேசுவது என்று டிரம்ப்பும், புதினும் முடிவு செய்தனர். இதன்படி, ஹெல்சிங்கியில் டிரம்பும், புதினும் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு, சுமார் 2 மணி நேரம் நீடித்தது. அப்போது இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்த இரு தலைவர்களும் உறுதி எடுத்தனர். மேலும், உலக விவகாரங்களில் அமெரிக்காவும், ரஷியாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் தலைவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
இந்த சந்திப்புக்குப் பிறகு டிரம்ப்பும், புதினும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது டிரம்ப் கூறியதாவது:
இதுவொரு நல்ல தொடக்கம்; அணுசக்தி நாடுகளாக திகழும் அமெரிக்காவும், ரஷியாவும் கடந்த பல ஆண்டுகளாக தனித்து செயல்பட்டு வருகின்றன. இனிமேல் இந்த இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று உலகம் விரும்புகிறது.
ரஷிய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தை, வெளிப்படையாகவும், நேரடியாகவும், மிகவும் ஆக்கப்பூர்வமானதாகவும் இருந்தது. இருநாடுகளுக்கு இடையேயான உறவு, தற்போது இருப்பது போல் எப்போதும் மோசமடைந்தது இல்லை. எனினும், அந்த நிலை 4 மணி நேரத்துக்கு முன்பு மாறிவிட்டது என நம்புகிறேன்.
அமெரிக்க தேர்தலில் ரஷிய தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணை, அமெரிக்காவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அதிபர் தேர்தலில் எங்கள் கட்சியினர் சிறப்பாக பிரசாரம் செய்தனர். அதனால்தான் என்னால் அமெரிக்க அதிபராக முடிந்தது என்றார் டிரம்ப். உலக கோப்பை கால்பந்து போட்டியை ரஷியா சிறப்பாக நடத்தி முடித்துள்ளதற்கு புதினிடம் தனது பாராட்டுகளை டிரம்ப் தெரிவித்துக் கொண்டார்.
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமெரிக்க தேர்தலில் ரஷியா தலையிடவில்லை. அதேபோல், அமெரிக்காவின் உள்விவகாரங்களில் தலையிடும் திட்டமும் ரஷியாவிடம் கிடையாது’ என்றார்.
இதனிடையே, பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் டிரம்ப், புதின் ஆகியோரைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிரீன் பீஸ் அமைப்பின் சார்பில் தலைவர்கள் இருவரை கண்டித்து பிரமாண்ட பதாகையும் வைக்கப்பட்டிருந்தது.
Related posts:
|
|