இடம்பெயரும் 700,000 ஈராக்கியருக்கான உதவிகளுக்கு ஐ.நா ஏற்பாடு!

Saturday, October 1st, 2016

ஈராக்கில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) என்று அழைத்துக் கொள்ளும் குழுவின் கோட்டையாக இருக்கும் மொசூல் நகரில் அரசின் படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டால் குறைந்தது 700,000 மக்களுக்கு உதவிகள் தேவைப்படும் என்று ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

ஐ.நா அகதிகளுக்கான நிலையத்தின் ஈராக் பிரதிநிதி பிரூனோ கெட்டோ குறிப்பிடும்போது, “பல ஆண்டுகளுக்கு அதிக பேரழிவை சந்திக்கும் இடமாக மொசூல் இருக்க சாத்தியம் உள்ளது” என்று எச்சரித்தார்.

ஏற்கனவே அதிக மக்கள் இடம்பெயர்வுக்கு உள்ளானதால் ஈராக் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. 2014 தொடக்கம் அங்கு சுமார் 3.3 மில்லியன் மக்கள் தமது சொந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

2014 ஜூனில் ஏனைய பகுதிகளுடன் ஐ.எஸ் மொசூல் நகரையும் ஆக்கிரமித்திருந்தது. எனினும் ஈராக்கிய படை அண்மையில் அதிரடியாக முன்னேற்றம் கண்டு இழந்த பல பகுதிகளையும் மீட்டு வருகிறது. இவ்வாறு இந்த ஆண்டு இறுதியில் மொசூலில் படை நடவடிக்கையை ஆரம்பிக்க ஈராக் அரசு எதிர்பார்த்துள்ளது.

இந்த யுத்தம் விரைவில் ஆரம்பமாகும் அறிகுறிகள் இருப்பதாக அமெரிக்கா அண்மையில் குறிப்பிட்டிருந்தது. இதற்காக உள்நாட்டு படையினருக்கு பயிற்சி மற்றும் ஏனைய உதவிகளை வழங்க 600 மேலதிக அமெரிக்க துருப்புகள் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த யுத்தத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இடம்பெயரும் அபாயம் இருப்பதாக கெட்டோ எச்சரித்துள்ளார்.

“700,000 மக்களுக்கு உதவிகளை வழங்க நாம் திட்டமிட்டிருக்கிறோம். தற்காலிக முகாம், குடிநீர் மற்றும் அனர்த்த சூழலில் மனிதாபிமான உதவிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன” என்று ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் கெட்டோ கூறினார்.

வெளியேறி வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற மக்களுக்காக ஐ.நா அகதிகளுக்கான நிலையம் ஏற்கனவே முகாம்களை அமைக்க ஆரம்பித்துள்ளது. விரைவாக அவை முன்னெடுக்கப்பட வேண்டி இருப்பதோடு அதற்கு தேவையான இட வசதி, நிதி உதவிகளை பெறுவதில் சிக்கல் இருப்பதாக கெட்டோ குறிப்பிட்டார்.

120,000 பேர்களுக்கு போதுமான 11 முகாம்களை இந்த ஆண்டு இறுதியில் பூர்த்தி செய்ய ஐ.நா எதிர்பார்த்துள்ளது. ஈராக் நிர்வாகம் மேலும் 150,000க்கும் அதிகமானோருக்கு போதுமான இடவசதிகளை செய்ய திட்டமிட்டுள்ளது.

“இது தான் எமது திட்டம். இந்த அளவு மிகக் குறைவாகும்” என்று அவர் எச்சரித்தார். இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டாலும் இடம்பெயரும் கிட்டத்தட்ட 430,000 மக்கள் தங்குமிட வசதிகள் இன்றி கைவிடப்படுவார்கள்.

இடம்பெயரும் மக்கள் தற்காலிக தங்குமிடங்கள் இல்லாமல் தவிப்பதை தவிர்க்க நகரை ஒட்டிய பகுதிகள் மற்றும் சூழவுள்ள கிராமங்களில் அவசர முகாம்களை அமைக்க ஐ.நா திட்டமிட்டுள்ளது. மோதல் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் உள்ள மக்கள் தற்காலிக பாதுகாப்பு பெறும் வகையிலேயே இந்த முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.

ஐ.நா இதற்கான ஏற்பாட்டு வேலைகளை ஏற்கனவே ஆரம்பித்திருப்பதாக குறிப்பிட்ட கெட்டோ, “நாம் எமது கூடாரங்களை அனைத்து இடங்களிலும் அமைப்போம்” என்றார்.மொசூல் மீதான படை நடவடிக்கை குறித்து ஈராக் இராணுவம் அண்மைக்காலத்தில் அதிக தீவிரம் காட்டி வருகிறது. எனினும் இந்த படை நடவடிக்கை குறித்த முதல் அறிவிப்பை அரசு கடந்த மார்ச் மாதத்திலேயே வெளியிட்டிருந்தது. அது தொடக்கம் மொசூல் நகர் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 62,000 பேர் வரை இடம்பெயர்ந்திருப்பதாக குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

coltkn-09-30-fr-08174435413_4823409_29092016_mss_cmy

Related posts: