ஆயுதமுனையில் கடத்தப்பட்ட வெளிநாட்டவர்!

Tuesday, August 9th, 2016

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மத்திய பகுதியில் வைத்து, அவுஸ்திரேலியர் ஒருவரும் அமெரிக்கர் ஒருவரும் ஆயுதமுனையில் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போரால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில், வெளிநாட்டவரை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டுவரும் கடத்தல்களின் சமீபத்திய ஒன்றாக இது அமைந்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாகப் பணியாற்றிவரும் இவ்விருவரும், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டதோடு, இக்கடத்தலுக்கு எந்தவொரு குழுவும் இதுவரை உரிமை கோரியிருக்கவில்லை.

இவர்களை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் மீட்புப் பணிகளைப் பாதிக்கக்கூடாது என்பதற்காக, இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை வெளியிடுவதிலிருந்து பின்வாங்குவதாக, ஆப்கானிஸ்தானின் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தமது நாட்டுப் பிரஜையொருவர் கடத்தப்பட்டதாக வெளிவந்த தகவல்கள் தொடர்பாக அறிந்திருப்பதாகக் கூறிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், மேலதிகமான தகவல்களை வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்தது. தமது நாட்டுப் பிரஜையொருவர் கடத்தப்பட்டிருக்கும் செய்தி, காபூலிலுள்ள தமது நாட்டுத் தூதரகமூடாகக் கிடைத்திருப்பதாகக் கூறிய அவுஸ்திரேலிய அரசாங்கம், பாதுகாப்புக் காரணங்கள் காரணமாக மேலதிக விவரங்களை வெளியிட மறுப்பதாகத் தெரிவித்தது.

மேலும், “கடத்தப்படுவதற்கான பாரதூரமான ஆபத்துகள் உள்ளடங்கலாக ஆபத்தான பாதுகாப்பு நிலைமை காரணமாக, ஆப்கானிஸ்தானுக்குப் பயணம் செய்ய வேண்டாமென, அவுஸ்திரேலியர்களுக்கு நாம் அறிவுறுத்துகிறோம்” என, அந்த அறிவிப்பு மேலும் தெரிவித்தது.

Related posts: