அரசியல் தீர்வே சிரிய நெருக்கடிகளுக்கு தீர்வாக அமையும்: சீன தூதுவர்

Friday, June 23rd, 2017

அரசியல் தீர்வு ஒன்றே சிரிய பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என சிரிய பிரச்சனைகளுக்கான சீனாவின் விசேட தூதுவர் Xie Xiaoyan, தெரிவித்துள்ளார்.

ஜோர்தானுக்கான  மூன்று நாள் விஜயத்தின் இறுதிநாளான நேற்று (புதன்கிழமை) அம்மானில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, ‘ சிரிய பிரச்சினை என்பது சிக்கலான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இது பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. எனவே இதற்கு தீர்வு காண்பது என்பது ஒப்பீட்டளவில் கடினமானது. அத்துடன் இந்த பிரச்சினையை முழுமையான குறுகிய காலத்தில் தீர்க்க முடியாது.எனவே சிரிய உள்நாட்டு கட்சிகள் பிராந்திய நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகள் சிறிது பொறுமையாக இருக்க வேண்டும். நம்பிக்கையை இழக்காதீர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இராணுவ வழிமுறைகள் மூலம் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்றும் அரசியல் தீர்வு ஒன்றே சரியான வழிமுறை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக சமாதான பேச்சுவார்த்தைகள் மூலம் கட்சிகளுக்கு இடையிலான வேறுபாடுகளை அகற்றவேண்டும், பொதுவான கருத்துக்களை கண்டறிய வேண்டும், இறுதியாக அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையான தீர்மானம் ஒன்றை கண்டறிய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, இறுதி தீர்மானத்திற்கான முடிவுகள் சிரிய மக்களால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அரசியலமைப்பினை நிர்ணயிக்கும் உரிமைகளை மக்களே கொண்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.சிரிய நெருக்கடிகளை சீனா தொடர்ந்து அவதானித்து வருவதாகவும் இந்த பிரச்சினைகளை அரசியல் ரீதியாக தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: