அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியாவின் புதிய கூட்டு – எதிர் நடவடிக்கைக்கு தயாராகும் சீனா!

பிராந்தியத்தில் தனது நிலையை வலுப்படுத்துவதற்காக முக்கியமான ஆசிய பிசிபிக் வர்த்தக உடன்படிக்கை ஒன்றில் இணைவதற்கு சீனா விண்ணப்பித்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையே வரலாற்று முக்கியம் வாய்ந்த உடன்படிக்கை அறிவிக்கப்பட்டு சில நாட்களிலேயே சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ட்ரான்ஸ்-பிசிபிக் கூட்டாண்மை என்ற இந்த ஒப்பந்தம் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்வதற்கு அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட விரிவான மற்றும் முற்போக்கான ஒப்பந்த ஒன்றாகும்.
எனினும் 2017 ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தில் இணைவதற்கு உலகின் இரண்டவாது மிகப்பெரிய பொருளாதாரமான சீனா, நியூசிலாந்து வர்த்தக அமைச்சரிடம் விண்ணப்பத்தை கையளித்தது என்று சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ தெரிவித்தார்.
இந்த உடன்படிக்கையின் நிர்வாக மையமாக நியூசிலாந்து செயற்படுகிறது.
ட்ரான்ஸ்-பிசிபிக் கூட்டாண்மை உடன்படிக்கை அவுஸ்திரேலியா, கனடா, சிலி, ஜப்பான் மற்றும் நியூசிலாந்து உட்பட 11 நாடுகள் மூலம் 2018 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது.
இதேவேளை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஆக்கஸ் ஒப்பந்தம் குறித்த தகவல் வெளியான அடுத்த நாள் சீனா சிபிடிபிபி ஒப்பந்தத்தில் சேர்வதற்கு விண்ணப்பித்துள்ளது.
ஆஸ்திரேலியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை கட்டுவதற்கு அமெரிக்காவும், பிரிட்டனும் தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொள்ள ஆக்கஸ் ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.
அது மட்டுமில்லாமல், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் தொடர்பான ஷரத்துகளும் இந்த ஆக்கஸ் ஒப்பந்தத்தில் வருகின்றன.
எனினும் ஆக்கஸ் ஒப்பந்தம் பொறுப்பற்றது, குறுகிய மனப்பான்மை கொண்டது என்று சீனா விமர்சித்துள்ளது
Related posts:
|
|