அமெரிக்கா – தென் கொரியா ராணுவ பயிற்சி: ஆணு ஆயுதம் ஏவுவோம் என வடகொரியா எச்சரிக்கை!
Tuesday, March 8th, 2016அமெரிக்கா மற்றும் தென் கொரியா கூட்டு ராணுவ பயிற்சிக்கு தயாராகிய நிலையில் ஆணு ஆயுதங்களை ஏவுவோம் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
3 முறை அணுகுண்டு சோதனை, ஒரு முறை ஹைட்ரஜன் குண்டு சோதனை, பல முறை ஏவுகணை சோதனை என தொடர்ந்து நடத்தி, உலக நாடுகளுக்கு வடகொரியா சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது.
தொடர் பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும், அணு ஆயுத திட்டங்களை தொடர்வதில் வடகொரியா கொஞ்சம் கூட கீழே இறங்கி வரவில்லை. சமீபத்திய ஹைட்ரஜன் குண்டு சோதனை, தொலைதூர ஏவுகணை சோதனைகளால் கடும் அதிர்ச்சி அடைந்த அமெரிக்காவின் தீவிர முயற்சியால், வடகொரியாவுக்கு எதிராக ஐ.நா. சபை கடுமையான பொருளாதார தடைகளை விதித்து 2ஆம் திகதி இரவு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.
ஆனால் அதற்கு பதிலடியாக ஒன்றன்பின் ஒன்றாக 6 ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளுக்கு வடகொரியா அதிர்ச்சியை தந்தது.
இந்நிலையில் அணு ஆயுத தாக்குதலுக்கு எந்த நேரத்திலும் தயாராக இருங்கள் என்று ராணுவத்துக்கு வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கிடையே தென் கொரியா மற்றும் அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சிக்கு தயார் ஆகிவருகிறது. தென் கொரியாவை சேர்ந்த 3 லட்சம் ராணுவ வீரர்கள், அமெரிக்காவை சேர்ந்த 17 ஆயிரம் ராணுவ வீரர்கள் அடங்கிய மிகப்பெரிய ராணுவ பயிற்சிக்கு இரு நாடுகளும் தயார் ஆகிவரும் நிலையில் வடகொரியா எச்சரிக்கை விடுத்து உள்ளது. ராணுவ பயிற்சியில் அமெரிக்காவின் கடற்படை கப்பல்களும், விமானங்களும் பங்குகொள்கிறது. இந்த பயிற்சி தொடங்குவதற்கு முன்னதாக வடகொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் ராணுவத்திற்கு எதிர்தாக்குதலை கொடுக்க தயாராக உள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பயிற்சியின் நோக்கமானது வடகொரியாவின் இறையாண்மையை குறைப்பதாக உள்ளது. முன்னெச்சரிக்கை இல்லாது ஏவுகணை தாக்குதலை நடத்த தயாராக இருக்கிறோம் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்து உள்ளது. வடகொரியா இதுபோன்ற எச்சரிக்கையை விடுப்பது முந்தைய காலக்கட்டங்களிலும் இருந்து உள்ளது, ஏற்கனவே பதட்டமாக காணப்பட்ட கொரிய தீபகற்பத்தில் வடகொரியாவின் புதிய எச்சரிக்கையானது மீண்டும் கூடுதல் பதட்டத்திற்கு காரணமாகி உள்ளது.
Related posts:
சசிகலா வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ஆப்கன் சிறப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி!
பசுமைத் தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கு உதவத் தயார் - ஐ.நாவில் தென்கொரியா அதிபர் அறிவிப்பு!
|
|