அமெரிக்காவில் கறுப்பின இளைஞன் சுட்டுக் கொலை!

Tuesday, April 13th, 2021

அமெரிக்கா – மின்னியாபோலிஸ் நகருக்கு வடக்கே உள்ள புரூக்ளின் சென்டர் நகர் பகுதியில் கருப்பின இளைஞர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு வன்முறை வெடித்துள்ளது. வன்முறைகள் மேலும் பரவாமல் தடுக்கும் நோக்குடன் இந்தப் பகுதி முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டவர் 0 வயதான டான்டே ரைட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு மே மாதம் ஜோர்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின இளைஞன் பொலிஸாரால் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு பெரும் வன்முறை வெடித்தது.

இந்நிலையில் தற்போது கருப்பின இளைஞன் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை அங்கு மற்றொரு வன்முறைக்கு வித்திட்டுள்ளது. இந்த இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து இன்று திங்கட்கிழமை காலை முதல் நூற்றுக்கணக்கானோர் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புரூக்ளின் சென்டர் பொலிஸ் தலைமையகத்துக்கு வெளியே திரண்ட நூற்றுகணக்கானோர் இந்தப் படுகொலைக்கு எதிராகக் கோஷமிட்டனர்.

இதன்போது போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகைக் குண்டு பிரயோகத்தை மேற்கொண்டனர். அங்கு தொடர்ந்து பதற்ற நிலை நிலவிவருவதால் புரூக்ளின் சென்டர் பகுதியில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

மின்னிசோட்டா மாகாணத்தில் உள்ள மின்னியாபோலிஸ் நகருக்கு அருகே உள்ள புரூக்ளின் சென்டர் நகரில் வீதிப் போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறப்படும் டான்டே ரைட்டுக்கு எதிரான கைதாணை உள்ளதாகக்கூறி பொலிஸார் அவரை தடுத்துள்ளனர். ஆனால் அதை உதாசீனப்படுத்தியவாறு டான்டே செல்ல முற்பட்டபோதே பொலிஸார் அவரைச் சுட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் குண்டுபாய்ந்து கருப்பின இளைஞன் டான்டே அதே இடத்தில் உயிர் இழந்ததாக புரூக்ளின் சென்டர் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த காருக்குள் இருந்த மற்றொரு பெண்மணி உயிருக்கு ஆபத்தின்றி தப்பியுள்ளார்.

சம்பவம் நடந்தபோது டான்டேவை சுற்றியிருந்த காவலர்கள் தங்களின் சீருடையில் சிறிய கண்காணிப்பு வீடியோ கமெராவை பொருத்தியிருந்ததாகவும் அதில் அனைத்து காட்சிகளும் பதிவாகியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து நகர மேயர் எலியாட் விடுத்துள்ள செய்தியில் சட்ட அமுலாக்கத்துறையினரால் மற்றுமொரு கருப்பின மனிதர் உயிரிழந்திருப்பதற்கு அரசு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறது என கூறியுள்ளார்.

Related posts: