அமெரிக்காவில் அதிகரித்த துப்பாக்கிச் சூட்டு – ஜோ பைடனின் அதிரடி நடவடிக்கை!
Friday, September 27th, 2024அமெரிக்காவில் அண்மைக் காலமாக துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு மட்டும் 385 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக, பாடசாலைகளில் நடத்தப்படும் துப்பாக்கிச் சூடுகள் மக்களை பெரிதும் பாதிக்கின்றன. இத்துப்பாக்கிப் பிரயோகங்களை கட்டுக்குள் கொண்டு வர புதிய சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது அந்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், “ஒரு தேசமாக துப்பாக்கி வன்முறையை தொடர்ந்தும் எம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது. இதனை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்” எனக் கூறினார்.
கடந்த 2023ஆம் ஆண்டில் அமெரிக்காவில் துப்பாக்கி சட்டத்தை கண்காணிக்கும் துறையானது துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸிடம் ஒப்படைக்கப்பட்டது. பாடசாலை மற்றும் கல்வி நிறுவனங்களில் துப்பாக்கி பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர அவர் பொறுப்பேற்றார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நிறைவேற்று அதிகாரம் மூலம் புதிய சட்டத்தை கொண்டு வரப் போவதாக பைடன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், ‘அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடுகளை முடிவுக்கு கொண்டு வரும் சட்டத்தில் இன்று கையொப்பமிடுகிறேன்’ என பதிவிட்டுள்ளார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் பேசுகையில்,
“அமெரிக்காவில் துப்பாக்கிப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமானால், அதனை வெளிப்படையாக பேச வேண்டும். நோய் அல்லது விபத்துக்களினால் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பார்க்கிலும் துப்பாக்கி வன்முறையால் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். இது வேதனையான விடயம்” என ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.
000
Related posts:
|
|