அமெரிக்காவிடம் அடிபணியமாட்டோம் : ஈரான் ஜனாதிபதி

Thursday, August 2nd, 2018

ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தும் அச்சுறுத்தும் வகையிலான கருத்துக்களை தெரிவித்தும், ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முடக்குவதற்கு அமெரிக்கா மேற்கொள்ளும் புதிய பிரசாரங்களுக்கும் தமது நாடு ஒருபோதும் அடிபணியாதென ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முரண்பாடுகள் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் ஈரான் ஜனாதிபதியை நிச்சயமாக சந்திப்பேன் என ட்ரம்ப் தெரிவித்திருந்த போதிலும், ட்ரம்ப்பின் அழைப்பை ஈரானின் மூத்த இராணுவ அதிகாரிகள் நிராகரித்துள்ளதுடன், ட்ரம்ப்பின் சொல்லும் செயலும் முரணானதென்றும் விமர்சித்துள்ளனர்.
பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுடன் ஈரான் அணு சக்தி ஒப்பந்தத்தை செய்து கொண்டது. அதற்கமைய அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மாத்திரமே பயன்படுத்துவதாக ஈரான் உறுதியளித்தது. இதனை ஏற்று, அந்த நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்திருந்த பல்வேறு பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட்டன.
ஆனால் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பொருத்தமற்றதென தெரிவித்து குறித்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. அதனைத் தொடர்ந்து, ஈரானிடம் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய வேண்டாமென தமது நேச நாடுகளுக்கும் அமெரிக்கா தெரிவித்து வந்ததினை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்து மோதல்கள் வலுப்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: