அண்ணாமலை முன்வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது – திராவிட முன்னேற்றக் கழகம் ஆதங்கம்!

தமது கட்சியைச் சேர்ந்த 12 பேர் மீது, பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை முன்வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று திராவிட முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது.
எனவே, அண்ணாமலை மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகம் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான, திராவிட முன்னேற்றக் கழகத்தின், முக்கிய பிரமுகர்களின் சொத்து விபரங்கள் எனத் தெரிவித்து, DMK Files என்ற தகவல்களை, பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி உள்ளிட்ட, முக்கியஸ்தவர்களின் சொத்து விபரங்கள் என சில தகவல்களை, அவர் வெளியிட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சொத்து மதிப்பு, 1.31 இலட்சம் கோடி இந்திய ரூபாயாகும் என அண்ணாமலை தகவல் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அண்ணாமலை குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கும் 12 பேரும் தேர்தலில் போட்டியிட்டவர்கள் என இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடும் போதும் அவர்களின் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்பது விதியாகும்.
இந்த நிலையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன்வைத்துள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|