அணு ஆயுதங்களை பயன்படுத்த கூடாது: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்று பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீது கடந்த 18–ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவம் 28–ந் தேதி தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் அமைத்திருந்த 7 முகாம்களை இந்திய ராணுவம் துவம்சம் செய்தது. இதில் 38 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் காஷ்மீரில் எல்லையில் உள்ள குப்வாரா, பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
பாகிஸ்தானில் உள்ள அரசியல் தலைவர்கள் இந்தியாவுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருகின்றனர். குறிப்பாக அணு ஆயுத தாக்குதலை இந்தியா மீது நடத்துவோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் காவ்ஜா ஆசிப் கடந்த 15 தினங்களில் இரண்டு முறை தெரிவித்தார். இது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களுக்கு முன் அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த காவ்ஜா ஆசிப், நாங்கள் அணு ஆயுதங்களை காட்சிக்காக வைக்கவில்லை எனவும் இந்தியா அத்து மீறி நடந்தால் அந்நாட்டுக்கு எதிராக பயன்படுத்துவோம் அந்நாட்டை அழிப்போம் என்று பேசி இருந்தார்.
பாகிஸ்தானின் உயர் மட்ட தலைவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சு ஒபாமா நிர்வாகத்தினரை எரிச்சலூட்டியுள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில்,” பாகிஸ்தான் வசம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்று நாங்கள் திரும்ப திரும்ப கோரி வருகிறோம். இது போன்ற பொறுப்பற்ற வகையில் பேசுவதை பாகிஸ்தான் உயர்மட்ட தலைவர்கள் தவிர்க்க வேண்டும்” என்றனர்.
Related posts:
|
|