WADA ஹக்கிங்: மேலும் ஒரு தொகுதி ஆவணங்களும் வெளியீடு!

ஊக்கமருந்துப் பாவனைக்கெதிரான உலக முவராண்மையின் (WADA) தரவுத்தளத்தினுள் புகுந்த ஊடுருவல்காரர்கள் (ஹக்கர்கள்), இரகசிய மருத்துவ அறிக்கைகளை வெளியிட்டிருந்த நிலையில், மற்றொரு தொகுதி அறிக்கைகளையும் அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.
முன்னர் வெளியிடப்பட்டிருந்த அறிக்கைகள், ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த செரினா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ், சிமோன் பைல்ஸ், எலினா டெல்லே டொன்னே ஆகிய நால்வரது மருத்துவ அறிக்கைகளும் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஐக்கிய அமெரிக்கா, ஜேர்மன், பிரித்தானியா, செக் குடியரசு, டென்மார்க், போலந்து, றோமானியா, ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 25 தடகள வீரர்களது விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த ஊக்கமருந்துப் பாவனைக்கெதிரான உலக முவராண்மையின் பணிப்பாளர் நாயகம் ஒலிவியர் நிக்லி, “இதுவரையில் 29 தடகள வீரர்களது தனிப்பட்ட தரவுகளைப் பொறுப்பற்று வெளியிட்டுள்ள இந்த குற்றவியல் நடவடிக்கை குறித்து, ஊக்கமருந்துப் பாவனைக்கெதிரான உலக முவராண்மை மிகவும் கவனமாக உள்ளது. இந்த நடவடிக்கை, இலக்குவைக்கப்பட்டுள்ள தடகள வீரர்களுக்கு மிகவும் அழுத்தமானதாக அமையுமென்பதை அறிவோம்” எனத் தெரிவித்தார்.
ஊக்கமருந்துப் பாவனைக்கெதிரான உலக முவராண்மையால் நியமிக்கப்பட்ட சுயாதீன விசாரணையாளர்களான பௌண்ட், மக்லரன் ஆகியோரின் விசாரணை அறிக்கைகள், அரச ஆதரவுபெற்ற ஊக்கமருந்துப் பாவனை இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே, இந்த ஹக் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இந்த ஹக் நடவடிக்கைகளை நிறுத்துவதற்குச் செய்யக்கூடிய அத்தனை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு, ரஷ்யாவைக் கோருவதாக, நிக்லி தெரிவித்தார். இதற்கான கோரிக்கை, ரஷ்ய அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|