T20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் மஷ்ரஃப் மோர்தசா!

Thursday, April 6th, 2017

பங்களாதேஷ் T20 கிரிக்கெட் அணியின் தலைவர் மோர்தசா T20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பங்களாதேஷ் ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட் அணியின் தலைவராக இருப்பவர் மஷ்ரஃப் மோர்தசா. தற்போது பங்களாதேஷ் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடர் நேற்று(04) தொடங்கியது.

பங்களாதேஷ் அணியின் தலைவர் மோர்தசா துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘இதுதான் பங்களாதேஷ் அணிக்காக நான் விளையாடும் கடைசி T20 கிரிக்கெட் தொடராகும். பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம், எனது குடும்பம், நண்பர்கள், அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதேபோல் கடந்த 15-16 வருடங்களாக எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதனால் மோர்தசா நாளை(06) நடக்கும் 2-வது T20 கிரிக்கெட் போட்டியுடன் சர்வதேச T20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். அதுதான் அவரது கடைசி T20 கிரிக்கெட் போட்டியாகும். அதன்பின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மட்டுமே விளையாடுவார்.

33 வயதாகும் மோர்தசா இதுவரை 52 T20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 368 ஓட்டங்களை சேர்த்ததுடன், 39 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.

Related posts: