T- 20 உலக கிண்ணம்: வங்கதேசத்தின் தவறால் இந்தியா வெற்றி!
Thursday, March 24th, 2016
டி20 உலக கிண்ணம் தொடரின் சூப்பர் 10 ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 1 ஓட்டம் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தெரிவு செய்தது. இதையடுத்து இந்தியாவின் ஆரம்ப வீரர்களாக ரோகித் சர்மாவும், தவானும் களமிறங்கினர்.
இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை குறையவாக இருந்தது.
இந்நிலையில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உட்பட 18 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரோகித் ஆட்டமிழந்தார்.
அடுத்த ஓவரிலேயே தவானும் ஆட்டமிழந்தார். அவர் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 23 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
இதனை அடுத்து களமிறங்கிய கோலியும், ரெய்னாவும் அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.
இதனால் இந்திய அணி 11 ஓவர் முடிவில் 73 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இந்நிலையில் 24 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் கோலி ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த பாண்டியா 2 பவுண்டரி மற்றும் 1சிக்ஸர் அடித்து வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.
கடந்த போட்டிகள் சொதப்பிய ரெய்னா இந்த ஆட்டத்தில் நிலைத்து நின்று ஆடினார். இந்நிலையில் 1 பவுண்டரி 2 சிக்ஸர்கள் உட்பட 30 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவரும் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் இந்தியாவின் ஓட்ட வேகம் குறைந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ஓட்டங்களை மட்டுமே இந்தியா குவித்தது.
டோனி 13 ஓட்டங்களிலும் அஸ்வின் 5 ஓட்டங்களிலும் களத்தில் இருந்தனர்.
147 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்க தேசம் துடுப்பெடுத்தாட தொடங்கியது.
முகமது மித்துன் ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தாலும், தமிம் இக்பால் மற்றும் சபீர் ரஹ்மான் இருவரும் சிறப்பாக ஆடினர்.
இதனால் வங்க தேசத்தின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. இந்நிலையில் 4 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்கள் எடுத்த நிலையில் தமிம் இக்பால் ஆட்டமிழந்தார்
இதையடுத்து சாகிப் அல் ஹாசன் களமிறங்கினார். இருவரும் இந்திய வீரர்களின் பந்து வீச்சை திறமையான சமாளித்து ஆடினர். அணியின் எண்ணிக்கை 69ஆக இருந்த நிலையில் சபீர் ரஹ்மான் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உட்பட 26 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மொர்டாஷா 6 ஓட்டங்களிலும், சாகிப் 2 சிக்ஸர் உட்பட 22 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.அப்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 12 ஓவர்களில் 95 ஆக இருந்தது. வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்கு சம அளவில் இருந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
முகமதுல்லா மற்றும் சவும்யா சர்கார் இருவரும் நிதானமாக ஆடி ஓட்டங்களை குவிக்க முயன்றனர்.
அவர்களை வெளியேற்ற இந்திய வீரர்கள் கடுமையாக முயற்சி செய்தனர். எனினும் ஐந்து ஓவர்களுக்கு பிறகே இதற்கு பலன் கிடைத்தது.
1 சிக்ஸர், 1 பவுண்டரி உட்பட 21 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சவும்யா சர்கார் ஆட்டமிழந்தார்.6 பந்துகளுக்கு 11 ஓட்டங்கள் எடுத்தால் வங்கதேசம் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.கடைசி ஓவரை பாண்டியா வீசினார்.
அந்த ஓவரில் தொடர்ந்து 2 பவுண்டரி அடித்த ரஹிம் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் முகமதுல்லாவும் ஆட்டமிழந்தார்.
எனவே 1 பந்துகளில் 2 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இதனால் ஆட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்டத்தின் கடைசி பந்தை சிறப்பாக வீசிய பாண்டியா சுவகட்டாவை ஆட்டமிழக்க செய்தார். இதன் மூலம் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
Related posts:
|
|