39 வயதில் 39 சிக்சர்கள்: சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்!

Monday, March 4th, 2019

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 39 சிக்சர்கள் அடித்தது குறித்து, மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள்-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடந்து வந்தது. இதில் இங்கிலாந்து அணி முதல் மற்றும் 4வது போட்டியிலும், மேற்கிந்திய தீவுகள் அணி 2வது மற்றும் 5வது போட்டியிலும் வெற்றி பெற்றன.

மூன்றாவது போட்டி மழையால் ரத்தானதால் இந்த தொடர் சமனில் முடிந்தது. மேற்கிந்த தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் இந்த தொடரில் இரண்டு சதம், இரண்டு அரைசதம் விளாசினார்.

மேலும், மொத்தம் 39 சிக்சர்கள் அடித்தார். இருநாடுகள் இடையிலான ஒருநாள் தொடரில் வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச சிக்சர்கள் இதுதான். உலகக் கிண்ண தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த கிறிஸ் கெய்ல், இந்த சாதனை குறித்து கூறுகையில்,

‘வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இதுவே எனது கடைசி ஒருநாள் தொடர். அதனால் ரசிகர்களுக்கு விருந்து படைக்க நினைத்தேன். தொடர் முழுவதும் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின.

ஜமைக்கா ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது சிறப்பான அனுபவத்தை அளிக்கக் கூடியது. ரசிகர்கள் எப்பொழுதும் நமக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருப்பார்கள். வெஸ்ட் இண்டீஸ் ஜெர்சியை அணிந்துகொண்டு, சொந்த மண்ணில் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது மிகச் சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கக் கூடியது.

நான் சமீபத்தில் பங்கேற்ற டி20 தொடர்களில் பெரிய அளவில் ஓட்டங்கள் குவிக்கவில்லை. ஆனால், இந்தத் தொடரில் பார்முக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. சொந்த மண்ணில் இதுதான் எனது சிறப்பான ஆட்டம் என நினைக்கிறேன். நான் சிறப்பாக விளையாடுவது குறித்தோ, சிக்சர்கள் விளாசுவது குறித்தோ ஆச்சரியப்படவில்லை.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அது இயல்பாகவே வருவது. டி20 தொடர்களில் நான் நிறைய சிக்சர்கள் விளாசியிருக்கிறேன். ஆனால், ஒருநாள் தொடரில் இதுதான் முதல்முறை என நினைக்கிறேன். 39 வயதில் 39 சிக்சர்கள் அடித்ததை பெருமையாகக் கருதுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Related posts: