23 ஆண்டுகளுக்கு பின்னர் உலக சாதனை முறியடிப்பு!

ஒலிம்பிக் மகளிருக்கான 10,000 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில், எத்தியோப்பியா வீராங்கனை அல்மாஸ் அயனா தங்கப்பதக்கம் வென்றதுடன் சீனா வீராங்கனையின் 23 ஆண்டு கால சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக் மகளிருக்கான 10,000 மீற்றர் ஓட்டப்பந்தய பைனலில், எத்தியோப்பியா வீராங்கனை அல்மாஸ் அயனா, பந்தய துாரத்தை 29 நிமிடம் 17.45 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். அதே சமயம், 1993ல் பீஜிங்கில் நடந்த போட்டியில் சீனா வீராங்கனை வாங் ஜூன்ஜியா பந்தய துாரத்தை 29 நிமிடம், 31.78 வினாடியில் கடந்தது உலக சாதனையாக இருந்தது.
தற்போது, 23 ஆண்டுகளுக்கு பிறகு அயனா பந்தய துாரத்தை 29 நிமிடம் 17.45 வினாடியில் கடந்து சீனா வீராங்கனையின் சாதனையை முறியடித்துள்ளார். கடந்த 2008ல் நடந்த பீஜிங் ஒலிம்பிக்கில் எத்தியோப்பியாவின் டிருனேஷ் டிபாபா பந்தய துாரத்தை 29 நிமிடம், 54.66 வினாடியில் கடந்தது ஒலிம்பிக் சாதனையாக இருந்தது. அதையும் அயனா முறியடித்துள்ளார்.
இப்போட்டியில், அயனாவை தொடர்ந்து பந்தய துாரத்தை 29 நிமிடம் 32.53 வினாடியில் கடந்து கென்யாவின் ஜெப்கிமோய் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். எத்தியோப்பியாவின் டிபாபா பந்தய துாரத்தை 29 நிமிடம், 42.56 வினாடியில் கடந்து மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கலம் வென்றார்.
Related posts:
|
|