2024 பாரிஸ் ஒலிம்பிக் – ரஷ்யர்கள் பங்குபற்ற ஆபிரிக்க ஒலிம்பிக் பேரவை ஆதரவு!
Tuesday, March 7th, 2023ரஷ்யா மறறும் பெலாரஸ் நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள், 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு ஆபிரிக்க ஒலிம்பிக் பேரவை தனது ஆதரவை நேற்று வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பையடுத்து, ரஷ்யாவுக்கும் அதற்கு ஆதரவளிக்கும் பெலாரஸுக்கும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்ற தடை விதிக்குமாறு உக்ரேன் கோரியது. இக்கோரிக்கைக்கு பல நாடுகள் ஆதரவளித்தன. இதையடுத்து பல்வேறு ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து ரஷ்யா ஒதுக்கப்ப்டுள்ளது.
எனினும், 2024 ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யர்கள் பங்குபற்றுவதற்கான வழிகளை ஆராய்வதாக சர்வதேச ஒலிம்பிக் குழு கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தது.
இதற்கு ஆசிய ஒலிம்பிக் பேரவையும் ஆதரவு தெரிவித்ததுடன், இவ்வருட ஆசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றுமாறு ரஷ்யாவுக்கும் பெலாரஸுக்கும் அழைப்பும் விடுத்தது. ஆசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்கான அழைப்பு கிடைத்துள்ளதாக ரஷ்யாவின் ஜிம்னாஸ்டிக் மற்றும் மல்யுத்த சம்மேளனங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்ய, பெலாரஸிய போட்டியாளர்கள் பங்குபற்றவதற்கு ஆபிரிக்க ஒலிம்பிக் பேரரவையும் ஆதரவளித்துள்ளது.
அவ்விரு நாடுகளின் போட்டியாளர்கள் சுயாதீன கொடியுடன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு ஆதரளிக்கும் தீர்மானம், மௌரிட்டானியாவில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆபிரிக்க ஒலிம்பிக் பேரரவையின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|