2017 உலகக் கிண்ணத்தை வெல்லுமா இலங்கை அணி?

Wednesday, November 23rd, 2016

இலங்கை அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் தடுமாறி வருகிறது. இதனால் இலங்கை அணி வரும் 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கிண்ணத்தை வெல்லுவார்களா, எவ்வாறு களமிறங்கப்போகிறார்கள் என்ற சந்தேகம் இலங்கை ரசிகர்கள் பலரிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அணியை பற்றி ஒரு மினி சர்வே பார்ப்போமே.

இலங்கை அணி 1996 ஆம் ஆண்டிலிருந்து தனது ஆதிக்கத்தை காட்டத்தொடங்கியது. இதற்கு அணியில் இருந்த திறமையான வீரர்கள், ஜெயசூர்யா, சங்ககாரா, டிசில்வா, வாஸ், ஜெயவர்த்தனே, டில்சான், முரளிதரன் என பல வீரர்கள் இருந்தனர்.

அதுமட்டுமில்லாமல் அன்றைய காலக்கட்டத்தில் இலங்கை அணியின் வீரர்கள் திறமையை வெளிக்கொண்டு வந்தவர் இலங்கை அணியின் அன்றைய பயிற்சியாளர் டாவ் வாட்மோர். இவருடைய அனுபவமான பயிற்சியின் மூலம் தான் இலங்கை அணி சாதிக்கத் தொடங்கியது. அதன் பின்னர் தான் இலங்கை என்ற அணி உள்ளது என்பதே தெரிய வந்தது.

இதனாலே இலங்கை அணியைக் கண்டு பலரும் அஞ்சினர். அதைத் தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ணம், 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டு உலககிண்ணம் இறுதிப்போட்டி என பல தொடர்களை வென்று அசத்தியது.

அதன் பின்னர் 2014 ஆண்டு மலிங்கா தலைமையிலான அணி டி20 உலகக்கிண்ணத்தை வென்று சாதித்து காட்டியது. இப்படி வலம் வந்த இலங்கை அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு மட்டும் 25 போட்டிகளில் பங்குபெற்று 12 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் டெஸ்ட் அணிகளுக்கான 2015 ஆம் ஆண்டு தரவரிசைப்பட்டியலில் 8 வது இடத்தில் நீடிக்கிறது.

2015 தான் அப்படி என்று பார்த்தால் 2016 இலங்கை அணிக்கு அதை விட மோசமான வருடமாக மாறியுள்ளது. 2016 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் தற்போது மேற்கிந்திய தீவு அணியுடம் மோதியது வரை இலங்கை அணி 16 போட்டிகளில் பங்குபெற்றுள்ளது.

இதில் கவனிக்கப்படவேண்டிய விடயம் நான்கு போட்டிகளில் மட்டுமே இலங்கை அணி வென்றுள்ளது. இதனால் 2016 ஆம் ஆண்டு ஒரு நாள் அணிகள் தரவரிசைப்பட்டியலில் இலங்கை அணி 32 சதவீதம் வெற்றிகளைப் பெற்று 8 வது இடம் வகிக்கிறது.

இதற்கு காரணம் இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்கள் இலங்கை அணிக்குள் ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் அனுபவ வீரர்களின் ஒருமித்த ஓய்வுகளும் என கூறப்படுகிறது.கடந்த ஆண்டில் மட்டும் இலங்கை அணியில் 25 போட்டிகளுக்கு 31 வீரர்கள் வெளியேற்றப்பட்டனர். எனினும் நடப்பாண்டில் இதுவரை 16 போட்டிகளில் மட்டும் 33 வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டனர்.

பலர் காயம் காரணமாக வெளியில் உள்ளனர். அதில் மூத்த வீரராக கருதப்படும் மற்றும் அணியின் தலைவரான மேத்யூசும் தான்.இதனால் எதிர்வரும் ஜிம்பாப்வே, வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்கா தொடர்களில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் நடப்பு தொடர்கள் சிலவற்றில் குசல் மென்டிஸ் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரை தொடர்ந்து பயன்படுத்தினால் எதிர்காலத்தில் அவர் ஒரு சங்ககாராவாக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.அசேல குணரத்ன மற்றும் நிரோஷன் டிக்வேல்ல போன்ற வளர்ந்து வரும் புதிய வீரர்களுக்கு மேலும் பல வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.

மேலும் சில திறமை வாய்ந்த இளம் வீரர்கள் சரியாக பயன்படுத்தப்படாமல் வெளியில் உள்ளனர். இதனால் இவர்களை எதிர்வரும் ஜிம்பாப்வே, வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.

ஏனெனில் கத்துக்குட்டி அணியாக கருதப்பட்ட வங்கதேச அணி கூட சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்து அணியை மிரட்டியது.

இதனால் எதிர்வரும் தொடர்களில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட்டு இலங்கை அணியை வலிமைமிக்க அணியாக மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும் வரும் 2017 ஆம் ஆண்டு நடக்கு உலகக்கோப்பைக்கு சிறந்த அணியாக இலங்கை அணி களமிறங்க வேண்டும்.

இலங்கை அணியுடன் மோதுவதற்கு அனைத்து அணிகளும் சற்று பயத்துடனே விளையாட வேண்டும். அந்த அளவிற்கு இலங்கை அணி வர வேண்டும் என்பதே அனைத்து இலங்கை ரசிகர்களின் கனவாக கருதப்படுகிறது.

625.0.560.320.500.400.194.800.668.160.90 (3)

Related posts: