20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக வயதில் அறிமுகமான ரையான் கேம்ப்பெல்

Wednesday, March 9th, 2016

ஹாங்காங் அணியில் ரையான் கேம்ப்பெல், சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக நேற்று(08) களம் இறங்கினார். அவருக்கு வயது 44 ஆண்டு 30 நாட்கள். இதன் மூலம் அதிக வயதில் 20 ஓவர் கிரிக்கெட்டில் அறிமுகமான வீரர் என்ற பெருமையை இவர் பெற்றார். இதற்கு முன்பு ஐக்கிய அரபு அமீரக வீரர் முகமது தாகிர் 43 வயது 176 நாட்களில் தனது முதல் 20 ஓவர் போட்டியில் களம் கண்டதே அதிக வயதில் அறிமுகமான வீரராக விளங்கினார்.

இந்த ஆட்டத்தில் ரையான் கேம்ப்பெல் 9 ரன்னில் (19 பந்து) ஆட்டமிழந்தார். கேம்ப்பெல், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். முன்பு துடுப்பாட்டத்துடன் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டார். ஆஸ்திரேலிய அணிக்காக 2002–ம் ஆண்டு இரண்டு ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 38, 16 ரன்கள் வீதம் எடுத்தார். தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடிய போதிலும் அதன் பிறகு அவருக்கு ஆஸ்திரேலிய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இவரது பாட்டி சீனாவைச் சேர்ந்தவர். இதனால் 2012–ம் ஆண்டு குடும்பத்துடன் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்குக்கு இடம் பெயர்ந்தார். அங்கு உள்ளூர் போட்டிகளில் ஆடிக்கொண்டே, கிளப் அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்தார். அதன் தொடர்ச்சியாக ஹாங்காங் அணியிலும் இடம் பிடித்து விட்டார்.

2002–ம் ஆண்டு ரையான் கேம்ப்பெல் ஆஸ்திரேலிய அணியில் அறிமுகம் ஆன போது, அவர்களை எதிர்த்து ஆடிய நியூசிலாந்து அணியில் பிரன்டன் மெக்கல்லம் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு தொடர்ந்து 14 ஆண்டுகள் சர்வதேச போட்டியில் ஆடிய மெக்கல்லம் கடந்த மாதம் ஓய்வு பெற்றார். ஆனால் ரையான் கேம்ப்பெல்லின் கதை முற்றிலும் வித்தியாசமானது. 14 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத ஓய்வில் இருந்த ரையான் கேம்ப்பெல், ஹாங்காங் அணியின் மூலம் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்திருக்கிறார்.

Related posts: