130 பந்தில் 176 ஓட்டங்கள் : தொடரை இழந்த மேற்கிந்திய தீவு!

Thursday, September 28th, 2017

இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் மேற்கிந்திய தீவு வீரர் லிவிஸ் 130 பந்தில் 176 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.இங்கிலாந்து சென்றுள்ள மேற்கிந்திய தீவு அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. மூன்று போட்டிகளின் முடிவில், இங்கிலாந்து அணி, 2-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி லண்டனில் நடக்கிறது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது

இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவு அணிக்கு துவக்க வீரர் கிறிஸ் கெயில் (2) வழக்கம் போல சொதப்பலாக வெளியேறினார். தொடர்ந்து வந்த ஹோப் (11), சாமுவேல்ஸ் (1) வரிசையாக பெவிலியன் திரும்பினர்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய எர்வின் லீவிஸ், ஒருநாள் அரங்கில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார். இதன்பின் ருத்ரதாண்டவம் ஆடிய லீவிஸ், 7 சிக்சர்கள் விளாசினார்.இவர் 176 ஓட்டங்கள் எடுத்த போது ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.பின் வந்த அணியின் தலைவர் ஹோல்டர் (77) தன்பங்கிற்கு அரைசதம் அடித்து கைகொடுக்க, இறுதியாக மேற்கிந்திய தீவு அணி 50 ஓவரில், 356 ஓட்டங்கள் குவித்தது.

அதன் பின் 357 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் ராய்(84), பெய்ஸ்டோ(39) ஓட்டங்கள் எடுத்து வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் இங்கிலாந்து அணி 35.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு .258 ஓட்டங்கள் எடுத்திருந்தது.டாக்வெர்ஸ் லிவிஸ் விதிப்படி இங்கிலாந்து அணி 253 ஓட்டங்கள் எடுத்திருந்தால் போதும், அந்தணி 258 ஓட்டங்கள் எடுத்ததால் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது.இப்போட்டியில் 176 ஓட்டங்கள் எடுத்து ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறிய லிவிஸ், சர்வதேச ஒருநாள் அரங்கில் இம்முறையில் அதிக ஓட்டங்கள் எடுத்து வெளியேறிய வீரர் என்ற விசித்திர சாதனை படைத்தார். முன்னதாக கடந்த 2009ல் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய ஜாம்பவான் சச்சின் 163 ஓட்டங்கள் எடுத்து வெளியேறியதே அதிகபட்சமாக இருந்தது.

Related posts: