123 பந்தில் இரட்டை சதம்!

Tuesday, July 19th, 2016

முதல் தர போட்டியில் அதிவேக இரட்டை சதமடித்த முன்னாள் இந்திய வீரர் ரவி சாஸ்திரியின் சாதனையை இங்கிலாந்து வீரர் டொனால்டு சமன் செய்துள்ளார்.

இங்கிலாந்தில் ‘கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிசன்-2’ முதல் தர கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.நான்கு நாட்கள் கொண்ட இந்த தொடரின் ஒரு போட்டியில் கிளமோர்கன் – டெர்பிஷைர் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற கிளமோர்கன் அணி முதலில் துடுப்பெடுத்தாட தெரிவு செய்தது. அந்த அணியில் 5-வது நபராக களம் இறங்கிய 19 வயது இளம் வீரரான அனேயுரின் டொனால்டு 80 பந்தில் 15 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

தொடர்ந்து விளையாடிய அவர் அடுத்த 43 பந்தில் சதம் விளாசி 123 பந்தில் இரட்டை சதம் அடித்தார்.122 பந்தில் 194 ரன்கள் எடுத்திருந்த அவர், அடுத்த பந்தை சிக்சருக்கு தூக்கி இரட்டை சதத்தை பதிவு செய்தார். 100, 150 மற்றும் 200 ஆகியவற்றை சிக்ஸ் அடித்து கடந்து அசத்தினார்.தொடர்ந்து விளையாடிய அவர் 136 பந்தில் 26 பவுண்டரி, 15 சிக்சர்களுடன் 234 ஓட்டங்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

இந்தியாவின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான ரவி சாஸ்திரி 1985-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற முதல் தர போட்டியில் 123 பந்தில் இரட்டை சதம் அடித்தார். இதுதான் முதல் தர போட்டியி்ல் அதிவேக இரட்டை சதமாக இருந்து வருகிறது. இந்த சாதனையை டொனால்டு தற்போது சமன் செய்துள்ளார்.

Related posts: