18 ஆண்டுகால வரலாற்றை மாற்றிய அவுஸ்திரேலியா!

Wednesday, August 7th, 2019

பர்மிங்காமில் நடந்த ஆஷஸ் முதல் டெஸ்டில் வெற்றி பெற்று, 18 ஆண்டு கால வரலாற்றை அவுஸ்திரேலியா மாற்றியுள்ளது.

இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஆஷஸ் டெஸ்ட் பர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 284 ஓட்டங்களும், இங்கிலாந்து 374 ஓட்டங்களும் எடுத்தன.

பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 487 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 142 ஓட்டங்களும், மேத்யூ வேட் 110 ஓட்டங்களும் குவித்தனர்.

இங்கிலாந்து அணிக்கு 398 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில் பர்ன்ஸ் 11 ஓட்டங்களிலும், ராய் 28 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். டென்லி 11 ஓட்டங்களிலும், அணித்தலைவர் ஜோ ரூட் 28 ஓட்டங்களிலும் நாதன் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் பேட் கம்மின்ஸ் வேகப்பந்து வீச்சில் மிரட்ட, மறுபுறம் லயன் சுழற்பந்து வீச்சில் இங்கிலாந்தை திணறடித்தார். இவர்களது கூட்டணி பந்துவீச்சில் நிலைகுலைந்த இங்கிலாந்து அணி வெறும் 146 ஓட்டங்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் 37 ஓட்டங்கள் எடுத்தார்.

நாதன் லயன் 49 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 32 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இங்கிலாந்தை சுருட்டியதன் மூலம் அவுஸ்திரேலிய அணி 251 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அத்துடன் 18 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை ஒன்றையும் அவுஸ்திரேலியா படைத்துள்ளது. போட்டி நடந்த எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில், அவுஸ்திரேலிய அணி கடந்த 2001ஆம் ஆண்டு வெற்றி பெற்றது. அதன் பின்னர் தற்போது தான் இங்கு வெற்றி பெற்றுள்ளது. இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசிய ஸ்டீவ் ஸ்மித் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Related posts: