16 ஆம் திகதி தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் ஆரம்பம்!

Tuesday, August 13th, 2019

2019 ஆண்டிற்கான தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் எதிர்வரும் 16 ஆம் திகதி சுகததாச விளையாட்டு திடலில் ஆரம்பமாகின்றது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் சிறப்பான தரத்தை வெளிப்படுத்துபவர்கள், இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள தெற்காசிய மெய்வல்லுனர் போட்டிகள் மற்றும் உலக மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்பதற்கான வாய்ப்புக்களை பெறுவர்.

இந்த நிலையில், தெற்காசிய மெய்வல்லுனர் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய விதி முறைகளுக்கு அமைய ஒரு போட்டியில் மட்டுமே பங்கு கொள்ள அனுமதிக்கப்படுவர்.

இதன் காரணமாக மகளீர் பங்கு கொள்ளும் போட்டிகளுக்காக 147 விண்ணப்பங்கள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.எப்படியிருப்பினும், ஆண்கள் பங்கு கொள்ளும் போட்டிகளுக்காக 486 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதேவேளை, இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள தெற்காசிய மெய்வல்லுனர் போட்டிகளில் 605 இலங்கை வீர வீராங்கனைகள் 27 போட்டிகளில் மட்டும் கலந்து கொள்வர் என தெற்காசிய மெய்வல்லுனர் இலங்கை பிரிவின் இயக்குனர் நாயகம் தம்மிக்க முத்துகல தெரிவித்துள்ளார்.