பிரபல கிரிக்கட் வீரர் தூக்கிட்டு தற்கொலை!

Friday, August 16th, 2019


இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் மேலாளருமான வி.பி. சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி. சந்திரசேகர் (வயது 57). இவர் சென்னை மயிலாப்பூர் விஸ்வேஸ்வர்புரத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு சந்திரசேகர் வீட்டின் அறையில் இருந்து நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் கதவை திறக்க முயற்சித்துள்ளனர். கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது வி.பி. சந்திரசேகர் அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் மயிலாப்பூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று சந்திரசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பில் காவல்துறை அதிகாரியொருவர் கருத்து தெரிவிக்கையில், வி.பி. சந்திரசேகர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிப்பதாக குறிப்பிட்டார்.

இந்திய அணிக்காக 1988-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை 7 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 88 ரன்கள் எடுத்துள்ளார். அதிரடி துடுப்பாட்ட வீரரான அவர், தமிழக அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் 81 போட்டிகளில் 4,999 ரன்கள் குவித்துள்ளார். ஒரு போட்டியில் 56 பந்தில் சதம் அடித்ததும் அடங்கும்.

தமிழக அணிக்கு பயிற்சியாளராகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மேலாளராகவும் இவர் பணியாற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: