தவானின் அதிரடி முடிவு!

Tuesday, September 24th, 2019


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடாத நிலையில், விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளதாக தவான் முடிவு செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான், உலகக் கிண்ண தொடரில் ஏற்பட்ட காயம் சரியான பிறகு, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் களமிறங்கினார்.

ஆனால், அந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வரும் தவான், இன்று நடக்கும் 3வது மற்றும் கடைசி போட்டியில் விளையாடுகிறார்.

இதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. ஆனால் இந்த தொடரில் தவான் விளையாடவில்லை. எனினும், வரும் 24ஆம் திகதி தொடங்கும் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் விஜய் ஹசாரே தொடரில் விளையாட இருக்கிறேன். அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் எந்தவொரு கிரிக்கெட்டில் விளையாடினாலும், ஈடுபாட்டுடன் விளையாடுவேன்.

அது விஜய் ஹசாரே, ரஞ்சி டிராபி அல்லது இந்திய அணியாக இருந்தாலும் சரி. நான் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்பதால் எனக்கு நேரம் கிடைக்கிறது.

அதனால் வீட்டில் இருப்பது அல்லது பயிற்சி மேற்கொள்வதை விட, போட்டிகளில் விளையாடுவது என்னுடைய உறுதி மற்றும் திறமைக்கு சிறப்பானதாக இருக்கும். போட்டி பயிற்சி சிறந்த பயிற்சி. ஆகவே, இதை நான் சிறந்த வாய்ப்பாக கருதுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Related posts: