உலகின் அதிவேக மனிதனாக கோல்மன்!

Monday, September 30th, 2019


உலக சம்பியன்ஷிப் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்க வீரர் கோல்மன் வெற்றி பெற்று அதிவேக மனிதர் பட்டத்தை கைப்பற்றினார்.

17வது உலக தடகள சம்பியன்ஷிப் போட்டி கட்டார் தலைநகர் டோஹாவில் நடந்து வருகிறது. இதில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட உலகின் அதிவேக மனிதர் யார் என்பதை நிர்ணயிக்கும் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

இதில் அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் கோல்மன் எளிதில் வெற்றி பெற்றார். தொடக்கத்திலேயே முன்னிலை வகித்த கோல்மன் எல்லைக்கோட்டை தொடும் வரை தன்னை யாரும் நெருங்காத வண்ணம் பார்த்துக் கொண்டார். அவர் 9.76 வினாடிகளில் இலக்கை கடந்தார். கடந்த முறை இவர் 2வது இடத்தை பிடித்திருந்தார்.

நடப்பு சம்பியனான மற்றொரு அமெரிக்க வீரர் ஜஸ்டின் கட்லின் வெள்ளிப்பதக்கமும் (9.89 வினாடி), கனடாவின் ஆந்த்ரே டி குரோஸ் (9.90 வினாடி) வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

23 வயதான கிறிஸ்டியன் கோல்மன், இந்த போட்டிக்கு முன்பாக சர்ச்சையில் சிக்கினார். ஊக்கமருந்து சோதனை நடத்துவதற்கு வசதியாக தாங்கள் எங்கு இருக்கிறோம் என்பதை ஊக்கமருந்து தடுப்பு அதிகாரிகளிடம் வீரர்கள் குறிப்பிட்ட நாட்களில் தெரியப்படுத்த வேண்டும். ஆனால் கோல்மன் கடந்த 12 மாதங்களில் மூன்று முறை தான் எங்கு இருக்கிறேன் என்பதை முன்கூட்டியே தெரியப்படுத்தி தன்னை சோதனைக்குட்படுத்த தவறினார். இத்தகைய விதியை மீறும்போது சம்பந்தப்பட்ட வீரருக்கு ஓராண்டு தடை விதிக்க முடியும். இதையடுத்து அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க தடகள ஜாம்பவான் மைக்கல் ஜோன்சன் வலியுறுத்தினார்.

ஆனால் ஊக்கமருந்து சோதனைக்குரிய திகதிகளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அவர் மீதான இந்த குற்றச்சாட்டை அமெரிக்க ஊக்கமருந்து தடுப்பு கழகம் கைவிட்டது. நடவடிக்கையில் இருந்து தப்பித்த கோல்மன் இப்போது உலகின் அதிவேக மனிதராகவே உருவெடுத்துள்ளார்.

இது குறித்து கோல்மன் நிருபர்களிடம் கூறுகையில், ‘உடல் திறனை அதிகரிக்கச் செய்யும் எந்த ஊக்கமருந்தையும் நான் பயன்படுத்தவில்லை. நான் எதையோ மறைப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை உறுதியாக சொல்கிறேன். நான் கனவுகளோடு வாழும் ஒரு இளம் கறுப்பின வீரர். சிலர் எனது புகழை கெடுக்க முயற்சிப்பது ஏமாற்றம் அளிக்கிறது. தடகளத்தில் தொடர்ந்து பங்கேற்று சரியான பாதையில் பயணிப்பேன். இதை விட இன்னும் வேகமாக என்னால் ஓட முடியும். என்றார்.

பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் நெதர்லாந்து வீராங்கனை சிபான் ஹசன் 30 நிமிடம் 17.62 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். எதியோப்பியாவில் பிறந்தவரான சிபான் ஹசன் தனது 15வது வயதில் அகதியாக நெதர்லாந்துக்கு இடம் பெயர்ந்து, அங்கேயே குடியேறி விட்டது குறிப்பிடத்தக்கது.

ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் ஜமைக்கா வீரர் தஜாய் கெய்ல் 8.69 மீட்டர் நீளம் தாண்டி தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் அமெரிக்காவின் டியன்னா பிரைஸ் (77.54 மீட்டர்), 50 கிலோமீட்டர் நடைப்பந்தயத்தின் ஆண்கள் பிரிவில் ஜப்பானின் யூசுக் சுசுகி (4 மணி 04.20 வினாடி), பெண்கள் பிரிவில் சீனாவின் ருய் லியாங் (4 மணி 23.26 வினாடி) ஆகியோரும் வெற்றி பெற்றனர்

Related posts: