உலகக்கிண்ண கிரிக்கெற்: முதல் வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து!

Friday, May 31st, 2019

தென்ஆப்பிரிக்க அணிக்கெதிராக நடைபெற்ற உலகக்கிண்ணம் தொடரின் முதல் போட்டியில் 104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

கோலாகலமாக துவங்கிய உலகக்கிண்ணம் தொடரின் முதல் போட்டி இலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூ ப்ளஸில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை குவித்தது.

இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 89 ரன்களும், கேப்டன் மோர்கன் 57 ரன்களும் குவிந்திருந்தனர். தென் ஆப்பிரிக்க அணியில் லுங்கி நேடி 3 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர், கஜிஸோ ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், Phehlukwayo 1 விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தார்.

312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி ஆரம்பத்திலே திணற ஆரம்பித்தது.

அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களாக அம்லா 13, மார்கம் 11, டூ பிளேஸிஸ் 5, டுமினி 8 ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறியதால், 39.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வியடைந்தது.

தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக டி காக் 68 ரன்களும், வான் டெர் டஸன் 50 ரன்களும் குவிந்திருந்தனர்.

இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், லியாம் பிளன்கெட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அடில் ரஷீத் மோயீன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

Related posts: